பாம்பன் ரயில் பாலத்தில் 10 நாட்களுக்குக்குள் இரண்டாவது முறையாக மோதிய மிதவை

பாம்பன் ரயில் பாலத்தில் 10 நாட்களுக்குக்குள் இரண்டாவது முறையாக மோதிய மிதவை
Updated on
1 min read

பாம்பன் ரயில் பாலத்தில் மீண்டும் ஒரு மிதவை மோதியது. விபத்துக்குள்ளான மிதவையை மூன்று மணிநேரம் போராட்டத்திற்குப் பின் மீட்டனர்.

இந்தியாவுடன் ராமேசுவரம் தீவை பாம்பனில் உள்ள ரயில் மற்றும் சாலைப் பாலங்கள் இணைத்து வருகின்றன. இதில் ரயில் பாலம் ஒரு நூற்றாண்டை கடந்து பழமைவாய்ந்த பாலமாக உள்ளதால் பாம்பன் கடலில் இந்த பாலத்தின் அருகிலேயே ரூ. 250 கோடி மதிப்பீட்டில் புதிதாக ரயில் பாலம் கட்டுவதற்கு பிரதமர் நரேந்திர மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டு தற்போது தூண்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இதற்காக இரும்பு மிதவைகள் பயன்படுத்தப் பட்டு வருகின்றன.

கடந்த அக்டோபர் 30 அன்று பாம்பன் கடற்கரை பகுதியில் வீசிய பலத்தக் காற்றினால் புதிய ரயில் பாலப் பணிகளுக்கான பயன்படுத்தப்பட்ட இரும்பு மிதவை மற்றும் அதிலிருந்த கிரேன்களில் ஒன்று பாம்பன் ரயில் பாலத்தில் மோதி பின் மீட்க்கப்பட்டது.

மிதவையின் டிரைவர் ஜார்கண்ட், கிரிடி மாவட்டத்தைச் சேர்ந்த ரகுநந்தன் என்பவர் மீது ராமேசுவரம் ரயில்வே காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் சனிக்கிழமை அதிகாலை பாம்பன் வடக்கு கடலில் நிறுத்தப்பட்டிருந்த மிதவைகளில் ஒன்று கட்டப்பட்டிருந்த கயிற்றை அறுத்துக்கொண்டு பாலத்தின் தூண் மீது மோதி விபத்துக்குள்ளானது. விபத்துக்குள்ளான மிதவையை ஊழியர்கள் மூன்று மணிநேரம் போராட்டத்திற்கு பின் நாட்டு படகு மூலம் மீட்டனர்.

பாம்பன் வடக்கு கடல் பகுதியில் ஆண்டுதோறும் அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரையிலும் காற்று கடலில் நீரோட்டம் அதிகளவில் இருக்கும். அந்த காலகட்டத்தில் பாம்பன் வடக்குக் கடல் பகுதியில் இருந்து படகுகள் தெற்கு பகுதிக்கு கொண்டு வரப்பட்டு பாதுகாப்புடன் நிறுத்தப்படும்.

ஆனால் கட்டுமானப் பணிக்கு பயன்படுத்தப்படும் மிதவைகள் பாதுகாப்பற்ற முறையில் வடக்கு கடல் பக்கமே நிறுத்தப்படுவதால் கயிற்றை அறுத்துக்கொண்டு பாம்பன் பாலத்தின் தூண்களில் மோதி விபத்து ஏற்படுவது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in