Published : 07 Nov 2020 05:34 PM
Last Updated : 07 Nov 2020 05:34 PM

தனியார் இ-சேவை மையங்கள் அதிகக் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை; பொதுமக்கள் புகார் தெர்விக்கலாம்: அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்திடம் உரிமம் பெற்ற தனியார் இ-சேவை மையங்கள் அதிகக் கட்டணம் வசூலித்தால் இ-சேவை மையங்களின் பயனர் குறியீடு எவ்வித முன் அறிவுப்பும் இன்றி உடனடியாக முடக்கப்படும் என, அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சரும் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் தலைவருமான உடுமலை ராதாகிருஷ்ணன் இன்று (நவ. 7) வெளியிட்ட அறிக்கை:

"தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் தமிழகம் முழுவதும் 595 அரசு இ-சேவை மையங்களை அமைத்து நிர்வகித்து வருகிறது. இச்சேவை மையங்கள் தலைமைச் செயலகம், அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள், மாநகராட்சி அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள், பெருநகர சென்னை மாநகராட்சியின் தலைமையிடம், மண்டல அலுவலகங்கள் மற்றும் சில கோட்ட அலுவலகங்களிலும் செயல்பட்டு வருகின்றன.

இச்சேவை மையங்கள் வாயிலாக அரசின் பல்வேறு சேவைகள் பொதுமக்களுக்கு வழங்கப்படுகின்றன. அரசு இ-சேவை மையங்கள் இல்லாத நகர்ப்புறப் பகுதிகளில், பொதுமக்கள் அரசின் சேவைகளை எளிதில் பெறும் வண்ணம், விருப்பமுள்ள தனியார் வலைதள மைய உரிமையாளர்களிடமிருந்து தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் உரிமம் பெற்ற இ-சேவை மையமாகச் செயல்பட 2018 ஆம் ஆண்டில் விண்ணப்பங்கள் கோரப்பட்டு, தகுதியான மையங்களுக்குத் தமிழ்நாடு மின்னாளுமை முகமை வாயிலாக பயனர் குறியீடு மற்றும் கடவுச் சொல் வழங்கப்பட்டு தனியார் இ-சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

இவ்வாறு தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்திடம் உரிமம் பெற்ற சில தனியார் இ-சேவை மையங்கள், பொதுமக்களிடமிருந்து அரசு நிர்ணயித்த சேவைக் கட்டணத்தை விட அதிகமாக வசூலிப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளன.

குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்படும் நேர்வில் அந்த தனியார் இ-சேவை மையங்களின் பயனர் குறியீடு எவ்வித முன் அறிவுப்பும் இன்றி உடனடியாக முடக்கம் செய்யப்படும் என்று தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

மேலும், இந்நிறுவனத்தின் அரசு இ-சேவை மையங்களிலும், இந்நிறுவனத்தின் உரிமம் பெற்ற தனியார் இ-சேவை மையங்களிலும் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக கட்டணம் வசூல் செய்வதாகப் புகார் தெரிவிக்க வேண்டுமென்றால், பொதுமக்கள் இந்நிறுவனத்தின் கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 425 2911-க்குத் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்".

இவ்வாறு அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x