

பாலியல் புகார் அளித்த பெண்ணை திருமணம் செய்வதாக தெரிவித்ததையடுத்து போக்சோ சட்டத்தில் கைதான இளைஞருக்கு ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடியைச் சேர்ந்தவர் அருண்குமார். இவரை இளம் பெண்ணை பலாத்காரம் செய்ததாக போக்சோ சட்டத்தில் போலீஸார் கைது செய்தனர்.
இந்த வழக்கில் அருண்குமார் ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை நீதிபதி இளந்திரையன் விசாரித்தார். அப்போது மனுதாரர் வழக்கறிஞர் வாதிடுகையில், மனுதாரரும், அப்பெண்ணும் நெருங்கிய உறவினர்கள். இருவரும் காதலித்துள்ளனர். இதில் அப்பெண் கர்ப்பமானார். அப்பெண்ணுக்கு தற்போது 17 வயதாகிறது. 18 வயது பூர்த்தியடைந்ததும் அவரை திருமணம் செய்ய சம்மதம் தெரிவித்துள்ளார் என்றார்.
இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
மனுதாரருக்கு ஜாமீன் வழங்கப்படுகிறது. மனுதாரர் மீதான வழக்கின் விசாரணை கீழமை நீதிமன்றத்தில் தொடங்குவதற்கு முன்பு மனுதாரர், பாதிக்கப்பட்ட பெண்ணை திருமணம் செய்வது தொடர்பாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும்.
மனுதாரர் அப்பெண்ணை 30.10.2021-க்குள் திருமணம் செய்து அதற்கான சான்றிதழை காவல் நிலையத்தில் சமர்பிக்க வேண்டும். தவறினால் மனுதாரர் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்கலாம்.
மனுதாரர் காவல் நிலையத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும். சாட்சிகளை கலைக்கவோ, தலைமறைவாகவோ முயற்சி செய்யக்கூடாது. இந்த நிபந்தனைகளை மீறினால் போலீஸார் மனுதாரர் மீது புதிய வழக்கு பதிவு செய்யலாம்.
இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.