Published : 07 Nov 2020 02:33 PM
Last Updated : 07 Nov 2020 02:33 PM

திருத்தணி கோயில் தங்கும் விடுதியைச் சட்டவிரோதச் செயல்களுக்குப் பயன்படுத்தும் ஊழியர்கள்: உயர் நீதிமன்றத்தில் வழக்கு

திருத்தணி முருகன் கோயில் தங்கும் விடுதியைக் கரோனா பேரிடர் காலத்தைப் பயன்படுத்தித் தவறான சட்டவிரோதச் செயல்களுக்குப் பயன்படுத்தும் ஊழியர்கள் குறித்துப் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லாததால் நடவடிக்கை கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

முருகக் கடவுளின் அறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடான திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்குச் சொந்தமான தங்கும் விடுதிகளில், விபச்சாரம், மது அருந்துவது, அசைவம் உண்பது போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்துவதாக கூறி, திருத்தணியைச் சேர்ந்த ஹர்ஷவர்த்தன் தவ்லூர் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், கரோனா ஊரடங்கு காலத்தில் கோயில் ஊழியர்கள் பெரியகார்த்தி, குப்பன் ஆகியோர், கோயிலுக்குச் சொந்தமான தங்கும் விடுதிகளை இதுபோன்ற சட்டவிரோதச் செயல்களுக்குப் பயன்படுத்துவதாகவும், அவர்கள் மீது கோவில் இணை ஆணையர் பழனிகுமார், அறங்காவலர் ஜெய்சங்கர் ஆகியோர் நடவடிக்கை எடுக்காமல், அவர்களுக்கு ஆதரவாக உள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

இவர்களுக்கு எதிராகச் சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுத்து கோயிலின் புனிதத்தைக் காக்க வேண்டும் என தனது மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x