

நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கும் மாநிலமாக மத்திய அரசின் சார்பில் தமிழகம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மத்திய பாஜக அரசு சார்பில் உருவாக்கப்பட்டுள்ள ஜல் சக்தி அமைச்சகம் சார்பில் இந்த விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த அமைச்சகம் சார்பில் நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கும் மாநிலங்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன. இரண்டாவது முறையாக இந்த விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் 2019-20 ஆம் ஆண்டுக்கான நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கும் மாநிலம் என்னும் தேசிய விருதுக்குத் தமிழகம் முதலிடத்தில் தகுதி பெற்றுள்ளது. மகாராஷ்டிரா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் முறையே 2-வது மற்றும் 3-வது இடத்தைப் பெற்றுள்ளன.
ஆறுகளை மீட்டெடுத்தல் பிரிவில் தென்னிந்தியாவைப் பொறுத்தவரை இரண்டு மாவட்டங்களுக்கு மட்டுமே விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் முதலிடத்தில் வேலூர் மாவட்டமும், 2-வது இடத்தில் கரூர் மாவட்டமும் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
நீர் சேமிப்பு என்ற பிரிவின் கீழ் மாவட்டங்களுக்கு வழங்கப்படும் விருதுகளில் பெரம்பலூர் மாவட்டம் 2-வது இடத்துக்குத் தேர்வாகியுள்ளது.
நீர் மேலாண்மையைச் சிறப்பாகக் கையாண்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் மதுரை மாநகராட்சிக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கும் மாநிலம் என்னும் தேசிய விருதுக்குத் தமிழகம் முதலிடத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
ஜல் சக்தி அமைச்சகம் சார்பில் நவ.12, 13 ஆகிய தேதிகளில் விருதுகள் வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.