

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனுக்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று (நவ. 7) தன் 66-வது பிறந்த நாளைக் கொண்டாடி வருகிறார். இதனை முன்னிட்டு, சென்னை, ஆழ்வார்பேட்டையில் அமைந்துள்ள அவரது இல்லத்தின் முன்பு அவருடைய ரசிகர்களும் கட்சித் தொண்டர்களும் காலையிலேயே கூடியிருந்தனர். இதையடுத்து, கூடியிருந்த ரசிகர்களைக் கமல்ஹாசன் சந்தித்தார்.
கமல்ஹாசனின் பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு தரப்பினரும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அவருடைய ரசிகர்கள், சமூக வலைதளங்களில் கமலுக்கு வாழ்த்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், திமுக தலைவரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று கமல்ஹாசனைத் தொலைபேசி வாயிலாகத் தொடர்புகொண்டு பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
பின்னர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்ட பிறந்த நாள் வாழ்த்துச் செய்தி:
"தலைவர் கருணாநிதியால் 'கலைஞானி' என்று போற்றப்பட்டவரும், எனது நெஞ்சம் நிறைந்த அன்புக்கு உரியவருமான நண்பர் கமல்ஹாசனுக்கு என் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்!
நலமுடனும் நீண்ட காலம் வாழ வேண்டும் என்ற எனது விருப்பத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்!".
இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.