Published : 07 Nov 2020 03:14 AM
Last Updated : 07 Nov 2020 03:14 AM

சபரிமலை பக்தர்களுக்கான முன்னேற்பாடுகள் குறித்து அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன்: கேரள அமைச்சருடன் காணொலியில் ஆலோசனை

சபரிமலை செல்லும் தமிழக பக்தர்களுக்கான முன்னேற்பாடுகள் குறித்து கேரள தேவசம் துறைஅமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரனுடன் தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் ஆலோசனை நடத்தினார்.

தமிழகத்தில் இருந்து சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கான முன்னேற்பாடுகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது.

இதில் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் பங்கேற்று, காணொலி மூலம் கேரள மாநில தேவசம் துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரனுடன் ஆலோசனைநடத்தினார். இக்கூட்டத்தில் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் பேசியதாவது:

தண்ணீர், உணவகம் வசதி

சபரிமலைக்கு ஆன்மிகப் பயணம் மேற்கொள்ளும் இந்திய யாத்ரீகர்களில் 40 சதவீதம் பேர்தமிழகத்தில் இருந்து செல்கின்றனர். இவர்கள் பயணம் மேற்கொள்ளும் கன்னியாகுமரி, தேனி, கோவை, திருநெல்வேலி மாவட்ட வழித்தடங்களில் உணவகங்கள், தண்ணீர் வசதி, அன்னதானக் கூடங்கள் உட்பட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு வருகின்றன.

மண்டல, மகரவிளக்கு பூஜைகாலத்தில் பக்தர்களுக்கு அனைத்து தகவல்களும் கிடைக்கப்பெறும் வகையில் சென்னையில் இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் அலுவலகத்தில் இலவச தொலைபேசி சேவையை 24 மணி நேரமும் இயக்க உள்ளோம். சபரிமலையில் ஒரு தகவல் மையமும் அமைக்கப்பட உள்ளது.

பக்தர்களின் தேவைக்காக திருநெல்வேலி, கன்னியாகுமரி, தேனி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் இந்த ஆண்டும் தகவல் மையங்கள் ஏற்படுத்தப்படும். பயணம் தொடர்பான அனைத்து தகவல்களையும் ஐயப்ப பக்தர்கள் எளிதாக அறிந்து கொள்ளும் வகையில் இந்து சமய அறநிலையத் துறையின் இணையதளத்தில் அறிவிப்புகள் இடம்பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அமைச்சர் சேவூர் ்எஸ்.ராமச்சந்திரன் கூறினார்.

அறநிலையத் துறை செயலர் விக்ரம் கபூர், துறை ஆணையர் சு.பிரபாகர் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர். தமிழகம், புதுச்சேரி, கேரளா, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா மாநில அரசு அலுவலர்கள் பலரும் காணொலி வாயிலாக பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x