

நாப்கின்கள் மற்றும் டயாப்பர்களை அழிக்க கல்வி நிறுவனங்கள் மற்றும் பொது இடங்களில் உள்ள கழிப்பறைகளில் நவீன தொழில்நுட்பத்தினாலான எரியூட்டிகளை அமைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்த ஜி.விஜயகுமார் என்பவர் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்னிந்திய அமர்வில் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறியிருப்பதாவது:
பெண்கள் மாதவிடாய் காலங்களில் பயன்படுத்தும் நாப்கின்கள் மற்றும் குழந்தைகளுக்கு அணிவிக்கப்படும் டயாப் பர்கள் ஆகியவற்றை பயன்படுத்துவோர் முறையற்ற வகையில் வீசி எரிவதால், அவை கழிவுநீரில் கலந்து, கடலுக்கு சென்றுவிடுகின்றனர். இதனால் பல்வேறு சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்படுகின்றன. அதனால் அவற்றை அறிவியல் ரீதியில் அழிக்கும் மேலாண்மையை உருவாக்கி, தயாரிப்பு நிறுவனங்களின் நிதியில் அழிக்க வேண்டும். தொழிலாளர்களுக்கு தொடர்ந்து மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும். பாதிக்கப்படும் தொழிலாளர்களின் மறுவாழ்வுக்கான சுழல் நிதி ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு மனுதாரர் கோரியிருந்தார்.
இந்த மனு, 1-ம் அமர்வின் நீதித்துறை உறுப்பினர் எம்.சொக்கலிங்கம், தொழில்நுட்பத் துறை உறுப்பினர் பி.எஸ்.ராவ் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அனைத்து கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், ரயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் அமைந்துள்ள கழிப்பறைகளில் நவீன தொழில்நுட்பத்தினாலான எரியூட்டிகளை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நாப்கின், டயாப்பர் ஆகியவற்றை அறிவியல் ரீதியில் அழிக்க தேசிய அளவில் ஒரு மேலாண்மை திட்டத்தை உருவாக்கி, அதை நாடு முழுவதும் செயல்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்ட அமர்வின் உறுப்பினர்கள், மனு மீதான விசாரணையை முடித்து வைத்தனர்.