

குன்னூரில் கடந்த ஒருவாரமாக கனமழை பெய்வதால், மலைப்பாதையில் ஆர்ப்பரித்து கொட்டும் அருவிகளின் அருகே சென்று சுற்றுலாப் பயணிகள் செல்ஃபி எடுக்க வனத் துறையினர் தடை விதித்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில் குன்னூரில், பகல் மற்றும் இரவு நேரங்களில் கன மழை பெய்து வருகிறது. இதனால், குன்னூர் மலைப்பாதை தற்போது பசுமையாக காணப்படுகிறது. இந்த பசுமைக்கிடையே வரக்கூடிய அருவிகளில், வெள்ளியை உருக்கி ஊற்றியதைபோல வெள்ளம் கொட்டுகிறது. இது, வெகுவாக சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வருகிறது. மேற்கண்ட பகுதிகளில் செல்ஃபி எடுக்கவும், புகைப்படம் எடுக்கவும் அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர்.
நீர்வீழ்ச்சி பகுதிக்கு செல்லும்போது சுற்றுலாப் பயணிகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் அபாயம் உள்ளதால், வனத் துறை சார்பாக அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டதுடன், புகைப்படம் மற்றும் செல்ஃபி எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.