

ரோந்து வாகனத்தில் புகார் அளிக்கும் திட்டத்தின்கீழ் பெறப்படும் புகார் மனுக்கள் மீது துரித நடவடிக்கை எடுக்காத காவல் ஆய்வாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் எச்சரித்துள்ளார்.
சென்னையில் உள்ள 12 காவல் மாவட்ட துணை ஆணையர்கள் அலுவலகத்தில் சைபர் கிரைம் பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது வரவேற்பை பெற்றுள்ளது. இதன் தொடர்ச்சியாக, காவல் நிலையம் வர இயலாத பொதுமக்கள் தினமும் காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையிலும் பிற்பகல் 3 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் அந்தந்த காவல் நிலைய சரகத்தில் அறிவிக்கப்பட்ட இடங்களில் நிறுத்தப்படும் காவல் ரோந்து வாகனங்களில் புகார் மனு அளிக்கலாம். இந்தப் புதிய திட்டத்தை கடந்த 4-ம் தேதி ஆணையர் தொடங்கி வைத்தார்.
இதில், சென்னை பெருநகரில் உள்ள 124 காவல் நிலைய சுற்றுக் காவல் ரோந்து வாகனங்கள் அந்தந்த காவல் நிலைய சரகத்தில் அறிவிக்கப்பட்ட இடங்களில் நிறுத்தப்பட்டிருந்தன. அவசர உதவி, சிறு பிரச்சினைகள் மற்றும் காவல் நிலையம் செல்ல இயலாத பொதுமக்கள் என 76 பேர் முதல் நாளில் புகார் மனுக்களை அளித்தனர். இதேபோல் 50-க்கும் மேற்பட்டவர்கள் சுற்றுக் காவல் ரோந்து வாகனங்களில் நேற்று புகார்களை அளித்தனர்.
உதாசீனம் கூடாது
இந்நிலையில், ரோந்து வாகனத்தில் அளிக்கப்படும் புகார்கள் மீது அந்தந்த காவல் நிலைய ஆய்வாளர்கள் உடனடி நடவடிக்கைஎடுக்க வேண்டும், புகார்தாரர்களை அலைக்கழிக்கவோ, உதாசீனப்படுத்தவோ கூடாது. கண்ணியமாக நடத்த வேண்டும். துரிதமாகசெயல்படாத காவல் நிலைய ஆய்வாளர்கள் மீது துறை ரீதியிலான கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்களுக்கும் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், பழிவாங்கும் நோக்கத்துடன் பொய் புகார் அளித்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.