

செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் அடுத்த வாயலூரில் பாலாற்று முகத்துவாரம் அருகே கடந்த 2019-ம் ஆண்டு ரூ.32.50 கோடி செலவில், 5 அடி உயரம் கொண்ட தடுப்பணை அமைக்கப்பட்டது. இதன்மூலம், பருவமழையால் கிடைத்த தண்ணீர் பாலாற்றில் தேக்கப்பட்டது. இதனால், பல்வேறு தரப்பினரும் பயனடைந்து வருகின்றனர்.
கடந்த ஆண்டு இறுதியில் பெய்த கனமழையின்போது தடுப்பணையை தாண்டி, தண்ணீர் வெளியேறுவதை சுற்றுப்புற கிராம மக்கள் மகிழ்ச்சியுடன் கண்டு ரசித்தனர்.மேலும், ஈசிஆர் சாலை வழியாக செல்பவர்கள் தடுப்பணைவிவரம் அறிந்து, அங்கு வந்து இளைப்பாறி தண்ணீர்தேங்கியுள்ளதை கண்டு ரசித்தனர்.
இவ்வாறு வருபவர்களுக்கு தின்பண்டங்கள், குடிநீர் உள்ளிட்டவைகளை உள்ளூர் மக்கள் விற்பனை செய்து வருவாய் ஈட்டினர். இதுபோல சிறிய சுற்றுலா தளம்போலவே இந்த அணை மாறியிருந்தது.
எனினும், தடுப்பணை பகுதிக்கு செல்ல முறையான பாதை இல்லாததால், குடியிருப்பு பகுதிகளின் வழியாகசெல்ல வேண்டிய நிலை உள்ளது. ஆனால் வாகனங்கள் செல்ல சரியான பாதை இல்லை. இதனால், மழைக்காலங்களில் தடுப்பணையின் நிலை குறித்து அறிய வரும் அதிகாரிகளும் நடந்து செல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது.
எனவே, இந்த அணையை சிறிய சுற்றுலா தளமாக மாற்றும் வகையிலும் தடுப்பணையின் கண்காணிப்பு பணிகளுக்காகவும் ஈசிஆர் சாலையில் இருந்து தடுப்பணை வரையில் கரையையொட்டி வாகனப் பாதை அமைக்க வேண்டும் என உள்ளூர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.