வேல் யாத்திரை தடை செய்யப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம்: காஞ்சி, செங்கை மாவட்டங்களில் பாஜகவினர் 630 பேர் கைது

திருத்தணியில் நடைபெற இருந்த பாஜகவின் வேல் யாத்திரையில் பங்கேற்க சென்ற செங்கல்பட்டு மாவட்ட பாஜகவினரை, பெருங்களத்தூரில்  போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதனால் அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். படம்: எம்.முத்துகணேஷ்
திருத்தணியில் நடைபெற இருந்த பாஜகவின் வேல் யாத்திரையில் பங்கேற்க சென்ற செங்கல்பட்டு மாவட்ட பாஜகவினரை, பெருங்களத்தூரில் போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதனால் அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். படம்: எம்.முத்துகணேஷ்
Updated on
1 min read

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் வேல் யாத்திரை நடத்த தடை விதித்த தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற 630 பாஜகவினர் நேற்று கைது செய்யப்பட்டனர்.

பாஜக சார்பில் திருத்தணியில் தொடங்கி திருச்செந்தூரில் முடியும்வகையில் வேல் யாத்திரை நடத்தப்படும் என பாஜகவினர் அறிவித்திருந்தனர். இந்த யாத்திரைக்கு தமிழக அரசு தடை விதித்தது.

இந்த யாத்திரை தடை செய்யப்பட்டதை கண்டித்து தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என பாஜக சார்பில் நேற்று முன் தினம் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அரசு அனுமதி அளிக்கவில்லை. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களைச் சுற்றிலும் போலீஸார் குவிக்கப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து நேற்று காலையில் பாஜகவினர் குழுக் குழுவாக காஞ்சி ஆட்சியர் அலுவலகம் நோக்கி வந்தனர். இதில் சிலர் வேலுடன் யாத்திரை செல்வது போலவே வந்தனர். எனவே தடையை மீறி வந்த அவர்களை போலீஸார் கைது செய்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின்போது யாத்திரை செல்ல முயன்ற பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் கைது செய்யப்பட்ட தகவல் பரவியதை அடுத்து, வாலாஜாபாத் கிழக்கு ஒன்றிய நிர்வாகி வேலுமணிஆட்சியர் அலுவலகம் அருகே தன்மீது பெட்ரோல் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றார். அவரை போலீஸார் கைது செய்தனர். காஞ்சிபுரத்தில் 310 பாஜகவினர் கைது செய்யப்பட்னர்.

இதேபோல் செங்கல்பட்டு மாவட்டத்தில் புதிய பேருந்து நிலையம் அருகே பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றனர். இவர்கள் வேல் யாத்திரையை தடை செய்த தமிழக அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். இந்நிலையில் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற 270 பேரை போலீஸார் கைது செய்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தையொட்டி காஞ்சிபுரம் பகுதியில் பல்வேறு பகுதி சாலைகளில் போலீஸார் தடைகளை ஏற்படுத்தி இருந்தனர். இதனால் பலர் கட்சிக் கொடிகளை மறைத்துக் கொண்டு வந்து, ஆட்சியர் அலுவலகம் அருகே வந்ததும் கட்சி கொடிகளை விரித்துப் பிடித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜகவைச் சேர்ந்த பெண்கள் சிலரும் பங்கேற்றனர்

இதேபோல் செங்கல்பட்டு பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து சென்ற சுமார் 50 பாஜகவினரை பெருங்களத்தூர் பகுதியில் போலீஸார் தடுத்து நிறுத்தினர். எனவே அவர்கள் அந்த இடத்திலேயே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அவர்களையும் போலீஸார் கைது செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in