

மதுரை உத்தங்குடியைச் சேர்ந்தவர் அல்லா பிச்சை. வெளிநாட்டில் பணிபுரிந்த இவர், கரோனா ஊரடங்கையொட்டி 3 மாதங்களுக்கு முன்பு ஊர் திரும்பினார். இவர் வீடு கட்டுவதற்காக மனைவிக்கு ஏற்கெனவே நகை, பணம் அனுப்பி இருந்தார். இந்நிலையில், கடந்த 3-ம் தேதி அவர் உட்பட குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் அவரவர் அறைகளில் தூங்கினர். அப்போது மனைவி தூங்கிய அறையில் பீரோவில் இருந்து ரூ.6.70 லட்சம், 6 பவுன் நகை திருடு போனதாக, அடுத்த நாள் காலை அல்லா பிச்சையின் மனைவி தெரிவித்துள்ளார்.
இது குறித்த புகாரின்பேரில் புதூர் காவல் ஆய்வாளர் (பொ) சுரேஷ்குமார், எஸ்.ஐ. சீனிவாசன் ஆகியோர் விசாரணை நடத்தினர். இது குறித்து போலீஸார் கூறியதாவது: வீடு கட்டுவதற்காக ஆழ்துளை கிணறு அமைக்க மனைவியிடம் அல்லா பிச்சை பணத்தைக் கேட்டுள்ளார். அப்போது கணவரிடம் இருந்து தப்பிக்க நகை, பணம் திருடு போனதாக நாடகமாடியதும், கணவர் அனுப்பிய ரூ.6 லட்சம் மற்றும் நகையை மனைவி செலவழித்ததும் தெரிய வந்தது. மேலும் ரூ.10 லட்சம் வரை அவர் கடன் வைத்திருப்பதும் தெரிய வந்தது. அல்லா பிச்சை சொல்வதை பொறுத்து, அவரது மனைவி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.