

திண்டுக்கல்
திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று அதிகாலை 4 மணி முதல் பரவலாக கன மழை பெய்தது. திண்டுக்கல் நகர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் மட்டும் நேற்று காலை 8 மணி வரை அதிகபட்சமாக 39.7 மி.மீ.் மழை பதிவானது. கொடைக்கானல்-7.6 மி.மீ, ஒட்டன்சத்திரம்-8மி.மீ, காமாட்சிபுரம், பழநி-2மி.மீ, வேடசந்தூர்-3.6 மி.மீ என மாவட்டத்தில் பரவலாக மொத்தம் 73.1 மி.மீ மழை பதிவானது.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டத்தில் கடந்த 2 தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. சிவகங்கை, காரைக்குடி, தேவகோட்டை, திருப்பத்தூர், இளையான்குடி, திருப்புவனம், காளையார்கோவில், சிங்கம்புணரி உள்ளிட்ட இடங்களில் நேற்று அதிகாலை முதல் பிற்பகல் வரை விட்டு விட்டு மழை பெய்தது. நேற்றுமுன்தினம் காலை 8 மணி முதல் நேற்று காலை 8 மணி வரை மழையளவு விவரம் (மி.மீ.ல்): சிவகங்கை 1.2, இளையான்குடி 33, திருப்புவனம் 1, தேவகோட்டை 13.4, காரைக்குடி 19.8, திருப்பத்தூர் 15, காளையார்கோவில் 12.4, சிங்கம்புணரி 14.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் நேற்று காலை வரை இடியுடன் கூடிய மழை பெய்தது. இதனால் மாவட்டத்தின் பல பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டது. தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கி நின்றது.
கடந்த 24 மணி நேரத்தில் நேற்று காலை 8 மணி வரை மாவட்டத்தில் பதிவான மழையளவு (மி.மீட்டரில்): பரமக்குடி- 64.8, ராமநாதபுரம்- 47, மண்டபம்- 7, பள்ளமோர்குளம்- 42, ராமேசுவரம்- 7.4, தங்கச்சிமடம்- 9.6, பாம்பன்- 11.9, ஆர்.எஸ்.மங்கலம்- 17, திருவாடானை- 8, தொண்டி- 11.2, வட்டாணம்- 13, தீர்த்தாண்டதானம்- 8, முது குளத்தூர்- 16, கடலாடி- 18, வாலி நோக்கம்- 35.2, கமுதி- 40.2 என ஒரே நாளில் மொத்தம் 356.3 மி.மீ. மழை பதிவானது.
தேனி
தேனி மாவட்டத்தில் பல பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த 2 நாட்களாக பெரியாறு அணை நீர்பிடிப்புப் பகுதியில் தொடர் மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் 860 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று 1,184 கனஅடியாக அதிகரித்தது. இதையடுத்து நீர்மட்டம் 124.20 அடியாக உயர்ந்துள்ளது. அணையில் இருந்து 1,300 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வரு கிறது.