

வருவாய்த்துறையின் செயல்பாடு கள் குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் புதன்கிழமை ஆய்வு செய்தார்.
இதுகுறித்து வருவாய்த்துறைச் செயலாளர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
சென்னை எழிலகத்தில் உள்ள வருவாய்த்துறை கருத்தரங்க கூடத்தில் துறையின் ஆய்வுக்கூட்டம் புதன்கிழமை நடந்தது. அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் வருவாய்த் துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, கூடுதல் தலைமைச் செயலர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் தர், கூடுதல் தலைமைச் செயலர் மற்றும் நிலநிர்வாக ஆணையர் கிரிஜா வைத்தியநாதன், நிலச்சீர்திருத்தத் துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜெய ரகுநந்தன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அமைச்சர் உதயகுமார் பேசுகையில், ‘‘வருவாய்த் துறையில் இதுவரை இல்லாத அளவில், ஏழை எளியோரின் நலனைக் கருத்தில் கொண்டு, பல திட்டங்களை முதல்வர் ஜெயலலிதா செயல்படுத்தியுள்ளார். குறிப்பாக, ‘அம்மா’ திட்டம், புதிய விரைவு பட்டா மாறுதல், விலையில்லா மிக்சி, கிரைண்டர் மற்றும் மின்விசிறி, புதிய உழவர் பாதுகாப்பு திட்டம், வங்கிகள் மூலம் முதியோர் ஓய்வூதியம் வழங்கும் திட்டம் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளுக்குத் தேவையான அனைத்து வகையான சான்றிதழ்களையும் தாம் பயிலும் பள்ளியிலேயே பெற்றுக் கொள்ளுதல் போன்ற சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் அனைத்து தரப்பு மக்களும் பயனடையும் வகையில் அமைந்துள்ளது.
மேலும், வருவாய்த்துறையின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் யாவும் உரிய நேரத்தில் மக்களைச் சென்றடையச் செய்வதன் மூலம், ஏழை எளிய அடித்தட்டு மக்களை சமூக மற்றும் பொருளாதாரத்தில் மேம்படுத்த இயலும். இதை அனைவரும் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும்’’ இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.