

தூத்துக்குடியில் தற்காலிகக் கடைகளுக்கு வாடகை வசூலிக்கத் தடை விதிக்கக் கோரிய வழக்கில் மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் ஆகியோர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி அண்ணா பேருந்து நிலைய வியாபாரிகள் நலச்சங்க செயலர் அன்னராஜன், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:
''தூத்துக்குடி அண்ணா பேருந்து நிலையத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் பேருந்து நிலையத்தில் இயங்கி வந்த கடைகள் காலி செய்யப்பட்டு, எஸ்.சி.வி. விளையாட்டு மைதானத்தில் தற்காலிகக் கடைகளாக அமைக்கப்பட்டன. இந்த மைதானம் மழைக்காலத்தில் குளம் போல் மாறிவிடுகிறது. இதனால் வியாபாரம் செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது.
இதனிடையே கரோனா ஊரடங்கின்போது கடைகள் அடைக்கப்பட்டு காய்கறிச் சந்தையாக மாற்றப்பட்டது. தற்போது காய்கறிக் கடைகள் காலி செய்யப்பட்டு கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கரோனா அச்சம் காரணமாகக் கூட்டம் குறைவாக இருப்பதால் கடைகளில் சரியாக வியாபாரம் நடைபெறவில்லை.
இந்நிலையில் தற்காலிகக் கடைகளுக்கு மாத வாடகையாக ரூ.6,500 மற்றும் ஜிஎஸ்டி சேர்த்து 21 மாதங்களுக்குப் பணம் கட்டச் சொல்லி மாநகராட்சி சார்பில் வியாபாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
வியாபாரம் சரியாக நடைபெறாமல் வியாபாரிகள் கஷ்டத்தில் இருக்கும்போது, வாடகை வசூல் நோட்டீஸுக்குத் தடை விதித்தும், வாடகையைக் குறைக்கவும், தரை வாடகை வசூலிக்கவும் உத்தரவிட வேண்டும்''.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வு இன்று விசாரித்து, மனு தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை நவ. 25-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.