Published : 06 Nov 2020 07:27 PM
Last Updated : 06 Nov 2020 07:27 PM

பாரம்பரியக் கோயில்களுக்கு விடிவுகாலம்; நிர்ணயிக்கப்பட்ட காலத்தில் திருப்பணி: தமிழகம் முழுவதும் விவரங்களைச் சேகரிக்கும் இந்து சமய அறநிலையத்துறை

100 ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியக் கோயில்களில் திருப்பணிகளை நிர்ணயிக்கப்பட்ட காலத்தில் மேற்கொண்டு கும்பாபிஷகம் நடத்த இந்து சமய அறநிலையத்துறை செயல்திட்டம் ஒன்றை உருவாக்கியுள்ளது. அதற்காகத் தமிழகம் முழுவதும் பாரம்பரியக் கோயில்கள், பாரம்பரியமல்லாத கோயில்கள் உள்ளிட்ட அனைத்துக் கோயில்களின் விவரங்களையும் சேகரித்து வருகிறது.

இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் தமிழகத்தில் 40,000 கோயில்கள் உள்ளன. இதுதவிர இந்து சமய அறநிலையத்துறையால் கண்டறியப்படாத, கவனத்திற்கு வராத ஆயிரக்கணக்கான ஊர்க்கோயில்கள் உள்ளன. இந்து சமய அறநிலையத்துறை கோயில்களின் சொத்துகள், அதன் உண்டியல், கடை வாடகை, நுழைவுக் கட்டணம் மற்றும் அபிஷேகக் கட்டணம் வருவாய் அடிப்படையில் முதுநிலைக் கோயில்கள், இரண்டாம்நிலைக் கோயில்கள், மூன்றாம்நிலைக் கோயில்கள், நான்காம்நிலைக் கோயில்கள் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளன.

மீனாட்சியம்மன் கோயில், திருப்பரங்குன்றம் முருகன் கோயில், பழனி முருகன் கோயில், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் உள்பட 46 புகழ்பெற்ற முதுநிலைக் கோயில்கள் உள்ளன.

பொதுவாகக் கோயில்களில் குறைந்தபட்சம் ஒவ்வொரு 12 ஆண்டுகளுக்கு ஒரு முறையும் திருப்பணி மேற்கொண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும் என்பது ஐதீகம். ஆனால், இந்து சமய அறநிலையத்துறை வருமானம் வரக்கூடிய கோயில்களைத் தவிர பிற கோயில்களில் திருப்பணி மேற்கொள்ளவும், கும்பாபிஷகம் நடத்தவும் ஆர்வம் காட்டவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.

இந்தக் குறைகளைக் களைவதற்கு தற்போது இந்து சமய அறநிலையத்துறை, தமிழகத்தில் உள்ள அனைத்துக் கோயில்களின் விவரங்களைச் சேகரித்து அதன் விவரங்களை இணையத்தில் சேமித்து, அதன் திருப்பணிகள், கும்பாபிஷேகத்தைத் தவறாமல் நடத்துவதற்கு ஏற்பாடு செய்துள்ளது.

இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:

''ஒரு வீட்டைக் கட்டினால் அதனை எப்படிக் குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு ஒரு முறை பராமரிக்கிறமோ அதுபோலவே கோயில்களையும் பராமரிக்கவே திருப்பணி மேற்கொண்டு கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது. இந்தத் திருப்பணியைக் குறைந்தபட்சம் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மேற்கொள்ள வேண்டும் என்பது மரபாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. திருப்பணிகள் சரியாக நடக்கவில்லை என்று குறைகூறுவது ஒரு புறம் இருந்தாலும், ஆண்டுதோறும் ஆயிரம் முதல் ஆயிரத்து ஐநூறு சிறு கோயில்களுக்குத் திருப்பணி மேற்கொண்டு இந்து சமய அறநிலையத்துறை கும்பாபிஷேகம் நடத்துகிறது.

ஆனால், இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில்லாத சில சிறு, குறு கோயில்கள் திருப்பணி நடக்காமல் இருக்கின்றன. அதற்குக் காரணம், அந்தக் கோயில்களை நிர்வகிக்கும் ஊர்க்காரர்கள், சமூகத்தினர் வசதியில்லாவிட்டால் அதன் திருப்பணியை மேற்கொள்ளாமல் விட்டுவிடுவார்கள். அதுபோல், உள்ளூர்ப் பிரச்சினைகளாலும் அக்கோயில்களில் திருப்பணி தடைப்படுகிறது. அதனால், அந்தக் கோயில்கள் குறித்து இந்து சமய அறநிலையத்துறையின் கவனத்திற்கு வராமல், திருப்பணிகளும் நடக்காமல் பாழடையும் நிலைக்குத் தள்ளப்படுகிறது.

இந்தக் குறைகளைப் போக்குவதற்கு, தற்போது தமிழகக் கோயில்களை வருவாய் அடிப்படையில் வகைப்படுத்தாமல் அதன் வரலாறு அடிப்படையில் பாரம்பரியமான கோயில்கள், பாரம்பரியமில்லாத புதிய கோயில்கள் என்று 2 வகையாக வகைப்படுத்தப்படுகின்றன. இதில், 100 ஆண்டுகளுக்கும் மேலான வரலாறு கொண்டவை பராம்பரியக் கோயிலாகவும், அதற்குக் கீழுள்ள கோயில்கள் புதிய கோயில்களாகவும் கணக்கிடப்படுகின்றன.

இந்த அடிப்படையில் தமிழகத்தில் உள்ள அனைத்துக் கோயில்களின் விவரங்களையும் உள்ளடக்கிய தகவல் தொகுப்பை ஏற்படுத்தி, அதைப் புகைப்படத்துடன் tnhrce.gov.in என்ற இந்து சமய அறநிலையத்துறையின் இணையதளத்தில் பதிவேற்றுகிறோம். இதற்காகச் சம்பந்தப்பட்ட மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தேவையான புகைப்படங்களுடன் பாரம்பரிய மற்றும் பாரம்பரியமற்ற கோயில்களின் பட்டியலைப் பதிவேற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்தக் கோயில்களில் உடனடியாக கும்பாபிஷேகம் செய்ய வேண்டிய பாரம்பரியக் கோயில்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அதன் திருப்பணிகளைச் செய்வதற்கு இந்து சமய அறநிலைத்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

தற்போது தமிழகத்தில் உள்ள அனைத்துக் கோயில்களின் விவரங்களும் சேகரிக்கப்பட்டு, பதிவேற்றும் பணி வேகமாக நடக்கிறது. அது முழுமையடைந்தால் திருப்பணி நடக்க நிர்ணயிக்கப்பட்ட காலத்தில், யாருடைய அனுமதிக்காகவும் காத்திருக்காமல் இயல்பாக நடத்த இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது''.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x