Published : 06 Nov 2020 06:28 PM
Last Updated : 06 Nov 2020 06:28 PM

சொத்து வரி தாமதத்துக்கு வசூலிக்கப்பட்ட 2% தனி வட்டி 0.5% ஆகக் குறைப்பு: சென்னை மாநகராட்சி அறிவிப்பு

சென்னை மாநகராட்சியால், கரோனா பேரிடர் காலத்தினைக் கருத்தில் கொண்டு, சொத்து வரி நிலுவைத் தொகைக்கு தனிவட்டி 2% என்பதற்குப் பதிலாக 0.5% எனக் குறைத்து நிலுவைத் தொகையை 31.03.2021-க்குள் செலுத்தலாம். ஏற்கெனவே வசூலிக்கப்பட்ட தனி வட்டி குறைக்கப்பட்டு நேர் செய்யப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு:

“சென்னை மாநகராட்சி முனிசிபல் சட்டம்-1919, பிரிவு-104ன்படி, சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட சொத்தின் உரிமையாளர்கள், அந்தந்த அரையாண்டு தொடங்கிய முதல் 15 தினங்களுக்குள் சொத்து வரியினைப் பெருநகர சென்னை மாநகராட்சிக்குச் செலுத்த வேண்டும்.

சென்னை மாநகராட்சி முனிசிபல் சட்டம்-1919க்கு, அரசால், தமிழ்நாடு சட்டங்கள் மற்றும் அவரசச் சட்டங்கள் கீழ், சட்டம் எண். 37/2018, சென்னை மாநகராட்சி முனிசிபல் (திருத்தம்) சட்டம், 2018ல் மேற்கொள்ளப்பட்ட சட்டத் திருத்தம், 01.10.2019 தேதி முதல் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டது.

அதன்படி, குறிப்பிட்ட காலத்திற்குள் சொத்து வரி செலுத்தும் உரிமையாளர்களுக்கு 5 சதவீதம் (அதிகபட்சம் ரூ.5000/-) ஊக்கத்தொகை அளிக்கப்பட வேண்டும் மற்றும் குறிப்பிட்ட காலத்தில் சொத்து வரி செலுத்தத் தவறிய சொத்து உரிமையாளர்களிடமிருந்து, செலுத்த வேண்டிய தொகையுடன் ஆண்டிற்கு 2 சதவீதம் தனி வட்டி சேர்த்து சொத்து வரி வசூலிக்கப்பட வேண்டும்.

தற்போது நிலவி வரும் கரோனா நோய்த்தொற்றுப் பரவல் பாதிப்பு காரணமாக, அரசால், அனைத்துத் தரப்பினரும் பயன்பெறும் வண்ணம், பல்வேறு சலுகைகள் அளித்து, பொருளாதாரம் மேம்பாடு அடைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், பெருநகர சென்னை மாநகராட்சியால், கரோனா பேரிடர் காலத்தினைக் கருத்தில் கொண்டு, சொத்து வரி நிலுவைத் தொகைக்கு ஆண்டிற்கு 2 சதவீதம் தனி வட்டி என்பதற்குப் பதிலாக 0.5 சதவீதம் தனி வட்டி எனக் குறைத்து நிலுவைத் தொகையை 31.03.2021க்குள் செலுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, 01.10.2019 முதல் நிலுவையில் உள்ள சொத்து வரி தொகைக்கு ஆண்டிற்கு 2 சதவீதம் தனி வட்டி விதிக்கப்படும் என்பதற்கு மாற்றாக 0.5 சதவீதம் தனி வட்டியுடன் நிலுவைத் தொகையைச் செலுத்தலாம் எனவும், மேலும், சட்டத் திருத்தத்தின்படி, ஏற்கெனவே நிலுவைத் தொகையினை ஆண்டிற்கு 2 சதவீதம் தனி வட்டியுடன் செலுத்திய சொத்து உரிமையாளர்களுக்கு, 0.5 சதவீதம் தனி வட்டி எனக் கணக்கிட்டு நேர் செய்து, மீதமுள்ள மிகைத்தொகை அடுத்த அரையாண்டுகளுக்கு ஈடுசெய்யப்படும் எனத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

எனவே, இதுநாள்வரை மாநகராட்சிக்குச் செலுத்த வேண்டிய சொத்து வரித் தொகை/ நிலுவைத் தொகையைச் செலுத்தாத சொத்து உரிமையாளர்கள், தாங்கள் செலுத்த வேண்டிய தொகையுடன் ஆண்டிற்கு 0.5 சதவீதம் தனி வட்டி சேர்த்து வரும் 31.03.2021 தேதிக்குள் செலுத்தி, இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி நிலுவைத் தொகை அனைத்தையும் செலுத்திப் பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

2020-21 ஆம் நிதியாண்டில் முதல் அரையாண்டு மற்றும் இரண்டாவது அரையாண்டில் செலுத்தவேண்டிய சொத்து வரியில் 31.10.2020 வரை ரூ.249.34 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னை மாநகராட்சி முனிசிபல் சட்டம்-1919, விதி-29 D மற்றும் விதி 29 E-ல், குறிப்பிட்டுள்ளவாறு, அடுத்து வரும் நிதி ஆண்டின் (2021-22) முதல் அரையாண்டு முதல் (I/2021-2022), அதாவது, 01.04.2021 முதல், குறிப்பிட்ட காலத்திற்குள் செலுத்தப்படாத சொத்து வரி நிலுவைகளுக்கு, ஆண்டிற்கு 2 சதவீதம் தனி வட்டி சேர்த்து வசூல் செய்யப்படும்”.

இவ்வாறு ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x