

கரோனா காலத்தில் புதுச்சேரி அரசு மகப்பேறு மருத்துவமனையில் கர்ப்பிணிகளுக்கு நம்பிக்கையூட்டி சிகிச்சை தரப்படுகிறது.
புதுச்சேரியில் கரோனா தொற்றின் பாதிப்பு அதிகம் இருந்தது. தற்போது குணமடையும் விகிதம் 93 சதவீதத்தைத் தொட்டுள்ளது. பலரும் தொற்றினால் மனத்தளவில் சோர்வுற்றிருந்தனர். அதே நேரத்தில் கர்ப்பிணிப் பெண்களின் நிலையோ இரு உயிர் சம்பந்தப்பட்டதாக இருக்கிறது.
கரோனா தகவல்கள் எங்கும் பரவியுள்ள இக்காலத்தில் கர்ப்பிணிப் பெண்கள், தங்கள் வயிற்றில் வளரும் சிசுவுக்குப் பாதிப்பு உருவாகுமோ, மகப்பேறு மருத்துவமனைக்குப் பரிசோதனைக்குச் சென்றால் தொற்று ஏற்படுமோ எனப் பலவித மனச்சிக்கல்களில் தவிப்புடன் இருக்கும் நிலையுள்ளது.
இதுபற்றி சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமாரிடம் கேட்டதற்கு, "புதுச்சேரி அரசின் ராஜீவ் காந்தி மகப்பேறு மருத்துவமனைக்குப் பரிசோதனை மற்றும் பிரசவத்துக்கு வரும் கர்ப்பிணிகளுக்கு மன தைரியம் தந்து பரிசோதனை தரப்படுகிறது. கரோனா காலத்தில் கர்ப்பிணிப் பெண்கள் பரிசோதனைக்கு வரும்போதும், பிரசவத்துக்கு வரும்போதும் கரோனா வைரஸ் காரணமாக மனத்தில் சில சந்தேகங்கள் அவர்களுக்கு ஏற்படுகின்றன.
'ரேபிட் ஆன்ட்டிஜென்ட்' பரிசோதனையால் 20 நிமிடத்தில் தொற்று இருக்கிறதா என்பதைக் கண்டறிகிறோம். அவசரக் காலத்தில் குழந்தைப் பேறுக்காக வந்தாலும் உடனடியாக சோதனை செய்து முடிவு கிடைக்கிறது.
பிறந்த குழந்தைகள் பாதுகாக்கப்படும் பிரிவு அதிகப் பாதுகாப்புடன் இருக்கிறது. அனைத்துக் குழந்தைகள் படுக்கை அருகேயும் கிருமிநாசினி வைத்துள்ளோம். ஒவ்வொரு முறையும் பச்சிளங்குழந்தையைத் தொடும்போதும் மருத்துவர்கள், செவிலியர்கள் கிருமிநாசினியைக் கையிலிட்டுக் கொள்கிறார்கள். நாளொன்றுக்கு நூறு முறைக்கு மேல் அவர்கள் கிருமிநாசினி பயன்படுத்தினாலும் ஆச்சரியமில்லை.
புதுச்சேரியில் பிறந்த எக்குழந்தைக்கும் கரோனா தொற்று இதுவரை ஏற்படவில்லை. குழந்தை பெற்று வீடு திரும்பும் பெண்கள், உறவினர்களைப் பார்க்க அனுமதிப்பதைத் தவிருங்கள். குழந்தை பெற்றவர்கள் குறைந்தபட்சம் மூன்று மாதங்களுக்கு வீட்டினுள் வெளிநபரை அனுமதிக்காதீர் என்பதைக் கண்டிப்புடன் குறிப்பிடுகிறோம்" என்று தெரிவித்தார்.
ராஜீவ் காந்தி மகப்பேறு மருத்துவமனை மருத்துவர்கள் கூறுகையில், "கரோனா பாதித்த கர்ப்பிணிப் பெண்களுக்குப் புதுச்சேரி அரசு மகப்பேறு மருத்துவமனையில் தனி கவனம் செலுத்தி மருத்துவம் பார்க்கப்படுகிறது.
கர்ப்பக் காலத்தில் சத்தான உணவுகளைச் சாப்பிட்டு தண்ணீர் நன்றாகக் குடித்து பயமின்றி இருக்க வேண்டும் என்று கூடுதலாக அறிவுறுத்துகிறோம். முக்கியமாக கர்ப்பிணிகளிடம், கரோனாவைப் பெரிய வியாதியாகக் கருதி மனத்தைக் குழப்பிக் கொள்ள வேண்டாம், டென்ஷனாக வேண்டாம் என்று சொல்கிறோம்.
காய்ச்சல் அறிகுறி இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு வரச்சொல்லி விடுகிறோம். முக்கியமாக தாய்மார்களுக்கு நாங்கள் சொல்வது, 'பயப்படாமல் தைரியமாக இருங்கள்' என்பதுதான். எல்லோருக்கும் நோய் எதிர்ப்புச் சக்தி தற்போது அதிகரித்துள்ளது என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம். முகக்கவசம் அணியுங்கள். அதில் கையை வைக்காதீர்கள். கையை அடிக்கடி கழுவுங்கள் என்று கர்ப்பிணிகளுக்கு அறிவுறுத்துகிறோம்" என்று தெரிவித்தனர்.