Published : 06 Nov 2020 05:23 PM
Last Updated : 06 Nov 2020 05:23 PM

தூத்துக்குடியில் நவ.11-ல் முதல்வர் பங்கேற்கும் ஆய்வுக்கூட்டம்; ஸ்டாலின் விரும்பினால் கலந்து கொள்ளலாம்: அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி

தூத்துக்குடியில் நவ.11-ம் தேதி முதல்வர் கலந்துகொள்ளும் ஆய்வுக்கூட்டம் நடைபெற உள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் விருப்பப்பட்டால் அதில் கலந்து கொள்ளலாம் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.

கழுகுமலையில் அமைச்சர் கடம்பூர் ராஜூ இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

''தமிழக முதல்வர் தூத்துக்குடி வர பயப்படுகிறார் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முதல்வர் ஏன் பயப்பட வேண்டும். தூத்துக்குடி மாவட்டத்தை வழங்கியதே அதிமுக ஆட்சிதான். கரோனா ஊரடங்கு காலத்தில் சுமார் 20 மாவட்டங்களை வரை ஆய்வுப் பணிக்குத் தமிழக முதல்வர் சென்றுள்ளார்.

திமுக தலைவர் ஸ்டாலின் கண்ணாடி அறைக்குள் இருந்துகொண்டு காணொலி மூலம் கட்சிக்காரர்களைச் சந்திக்கிறார். அவர்கள் கட்சிக்காரர்களைச் சந்திக்கவே பயப்படுகிறார். இவருக்கு முதல்வரைப் பற்றிக் குறைகூறத் தகுதியுமில்லை, அருகதையுமில்லை. அவர் துணை முதல்வராக இருந்தபோது, அவரது சகோதரர் அழகிரிக்குப் பயந்து மதுரைப் பக்கமே வராமல் இருந்தார். அதன் பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா பாதுகாப்பு அளித்த பின்னர்தான் மதுரைக்கு வந்தார்.

அதிமுக ஆட்சியில் மக்கள் நலத்திட்டங்கள் ஏராளமாக நிறைவேற்றப்பட்டுள்ளன. தமிழக முதல்வர் நவ.11-ம் தேதி தூத்துக்குடி வர உள்ளார். ஏராளமான திட்டங்களை அறிவிக்க உள்ளார். ஸ்டாலின் விருப்பப்பட்டால் முதல்வர் தலைமையில் நடைபெறு ஆய்வுக்கூட்டத்தில் கலந்து கொள்ளலாம். நேரடியாகப் பார்க்கலாம். சிறப்பான ஆய்வுக்கூட்டமாக இருக்கும். அதிமுகவில் யாரும் பயப்பட மாட்டோம். திமுகவில்தான் பயந்த வரலாறு உண்டு.

கமல்ஹாசன் 'நம்மவர்' என்ற திரைப்படத்தில் நடித்ததால் நல்லவர் என்று சொல்கிறார் என நினைக்கிறேன். அரசியலில் 3-வது அணி அல்ல, 4-வது அணி கூட அமைக்கலாம்.

2016-ல் அதிமுக மக்களுடன் கூட்டணி அமைத்து வெற்றி பெற்றது. திமுக வலுவான கூட்டணி அமைத்திருந்தது. 3-வது அணியும் களத்தில் இருந்தது. எத்தனை அணி இருந்தாலும் தன்னந்தனியாக நின்று தேர்தல் களத்தில் வென்ற இயக்கம் அதிமுகதான். எனவே, இந்த முறையும் எத்தனை அணி அமைந்தாலும் கவலையில்லை. தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சிதான். நாங்கள்தான் வெற்றி பெறுவோம்''.

இவ்வாறு அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x