Published : 06 Nov 2020 05:06 PM
Last Updated : 06 Nov 2020 05:06 PM

கழிவுகளைக் கொட்டிய வழக்கு; எண்ணூர் காமராஜர் துறைமுகத்துக்கு விதிக்கப்பட்ட அபராதம்: ரூ.4 கோடியாகக் குறைத்து பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

சென்னை எண்ணூர் கழிமுகப் பகுதிகளில் கழிவுகளைக் கொட்டிய வழக்கில் எண்ணூர் காமராஜர் துறைமுகத்திற்கு விதிக்கப்பட்ட 8 கோடி ரூபாய் அபராதத்தை, 4 கோடி ரூபாயாகக் குறைத்து தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

எண்ணூர் துறைமுகம் அருகில் உள்ள, காமராஜர் துறைமுகம், கடந்த 2016-ம் ஆண்டு விரிவாக்கம் செய்யப்பட்டது. அப்போது உண்டான கழிவுகள், எண்ணூர் முகத்துவாரத்துக்கு உட்பட்ட சதுப்புநிலக் காடுகள் இருக்கும் இடங்களில் கொட்டப்பட்டன. இந்தக் கழிவுகளை அகற்றக் கோரி, எண்ணூரைச் சேர்ந்த ரவிமாறன், தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வில் வழக்குத் தொடர்ந்தார்.

அதேபோல், வடசென்னை அனல்மின் நிலையத்தின் சாம்பல் கழிவுகள் கொண்டு செல்லும் குழாய்கள் சேதமடைந்திருப்பதால், கொசஸ்தலை ஆற்றில் மாசு ஏற்பட்டுள்ளது. அதைச் சீரமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி கே.ஆர்.செல்வராஜ்குமார் என்பவரும் இதே அமர்வில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்குகளை விசாரித்த பசுமை தீர்ப்பாய அமர்வு, கழிவுகள் கொட்டப்பட்ட இடத்தை ஆய்வு செய்து, பெற வேண்டிய இழப்பீடு குறித்து அறிக்கை அளிக்க மத்திய, மாநில மாசு கட்டுப்பாடு வாரியம், சென்னை ஐஐடி நிபுணர்கள் அடங்கிய குழுவை ஏற்கெனவே அமைத்திருந்தது.

இந்நிலையில், இந்த வழக்குகள் அமர்வின் நீதித்துறை உறுப்பினர் நீதிபதி கே.ராமகிருஷ்ணன், தொழில்நுட்ப உறுப்பினர் சாய்பால் தாஸ்குப்தா ஆகியோர் முன்னிலையில் கடந்த ஜனவரி 21 அன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வல்லுநர் குழு, ஆய்வு அறிக்கையைத் தாக்கல் செய்தது.

அதை ஏற்க மறுத்து, பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:

''எண்ணூர் கழிமுகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் கழிவுகளைக் கொட்டி, சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுத்தியதற்காக, காமராஜர் துறைமுகமானது இடைக்கால இழப்பீடாக ரூ.8 கோடியே 34 லட்சத்தை, மத்திய மாசுகட்டுப்பாடு வாரியத்திடம் செலுத்த வேண்டும்.

அப்பகுதியில் தொடர்ச்சியாக சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டு வரும் நிலையில், அங்கு சூழலை மீட்டெடுக்க 2023-ம் ஆண்டு வரை கால அவகாசம் வழங்க முடியாது. குறுகிய காலத்தில் அனைத்துக் கழிவுகளையும் அகற்றி, குழாய்களை மாற்ற புதிய காலக்கெடுவை வல்லுநர் குழு நிர்ணயிக்க வேண்டும்.

அனல்மின் நிலையத்தால் பக்கிங்ஹாம் கால்வாய், கொசஸ்தலை ஆறு ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்புக்கு எவ்வளவு தொகையை இழப்பீடாகப் பெறலாம் என்பதையும் ஆய்வு செய்ய வேண்டும்.

மேலும், பாதிக்கப்பட்ட இடங்களை மறுசீரமைப்பு செய்தவற்கான செயல்திட்டத்தை உரிய நிபுணர்களை நியமித்துத் தயாரிக்க வேண்டும். இந்த உத்தரவுகளைப் பின்பற்றி, 4 மாதங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்''.

இவ்வாறு தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து, காமராஜர் துறைமுகம் சார்பில் சீராய்வு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த தீர்ப்பாயம், துறைமுகத்துக்கு விதிக்கப்பட்ட 8.3 கோடி ரூபாய் அபராதத்தை 4 கோடி ரூபாயாகக் குறைத்து உத்தரவிட்டது. இத்தொகையை இரண்டு மாத காலத்தில் செலுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x