Published : 06 Nov 2020 04:38 PM
Last Updated : 06 Nov 2020 04:38 PM

பட்டா வழங்கும் அரசாணையை எதிர்த்து வழக்கு; கோயில் நிலங்களில் குடியிருக்கும் ஏழை, எளிய மக்களுக்கு பாஜக துரோகம்: மார்க்சிஸ்ட் கட்சி கண்டனம்

ஏழை, எளிய மக்கள் குடியிருந்து வரும் கோயில் நிலங்களுக்கு பட்டா வழங்குவதற்கான நடவடிக்கையை அரசு மேற்கொண்டுள்ளது. இதனை ஏற்றுக் கொள்ள மறுத்து பாஜக-வினர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து சுமார் ஒரு வருட காலமாக அரசாணையை செயல்படுத்தாமல் தடையாணை பெற்றுள்ளது துரோகம் என மார்க்சிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் இன்று விடுத்துள்ள அறிக்கை:
“பல தலைமுறைகளாக கோயில்கள், மடங்கள், அறக்கட்டளைகளுக்கு சொந்தமான நிலங்களில் குடியிருந்து வரும் ஏழை, எளிய மக்கள் வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டுமென நெடுங்காலமாக போராடி வருகிறார்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பல்வேறு விவசாய அமைப்புகளும் இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்திருக்கிறோம்.

இதன் விளைவாக, தமிழக அரசு கடந்த 30-8-2019 அன்று அரசாணை 318-ன் மூலம் வீட்டு மனைப்பட்டா வழங்குவதற்கான ஒருங்கிணைந்த உத்தரவினை வெளியிட்டுள்ளது. இதில் கோவில் நிலங்களில் குடியிருந்து வரும் ஏழை குடும்பங்களின் நலன் கருதி விதிமுறைகளுக்கு உட்பட்டு தகுதியான நபர்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்கிடவும் அந்த நிலங்களை உரிய வகையில் கையகப்படுத்தி நிலமதிப்பு நிர்ணயம் செய்வதற்கு ஏற்கனவே 2018-ல் வெளியிடப்பட்ட அரசாணையின் மூலம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென தெரிவித்துள்ளது.

இவ்வாணையின்படி, ஏழை, எளிய மக்கள் குடியிருந்து வரும் நிலங்களுக்கு விலை நிர்ணயம் செய்து அரசு அதற்கான தொகையினை சம்பந்தப்பட்ட கோவில் நிர்வாகத்திடம் செலுத்தி அந்த நிலத்தை கையகப்படுத்தி, பட்டா வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இதனை ஏற்றுக் கொள்ள மறுத்து பாஜக-வினர் இந்த அரசாணையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து சுமார் ஒரு வருட காலமாக மேற்கண்ட ஆணையை செயல்படுத்தாமல் தடையாணை பெற்றுள்ளனர். இதனால் பல தலைமுறைகளாக கோவில்நிலங்களில் குடியிருப்போருக்கு பட்டா கிடைப்பதற்கான வாய்ப்பு தடுத்து நிறுத்தப்பட்டு, இம்மக்கள் பெரும் வேதனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

இந்து அறநிலையத்துறை சட்டவிதி 34-ன் படி அரசின் பொது நோக்கங்களுக்கு அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலங்களை உரிய விதிமுறைகளுக்கு உட்பட்டு பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற விதிக்கு விரோதமாக பாஜக-வினர் நீதிமன்றத்தில் வழக்கு போட்டு தடை பெற்றுள்ளனர். ஏழை, எளிய. தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் பட்டா உரிமைக்கு எதிராக பாஜக குறுக்கே நிற்பது வன்மையான கண்டனத்திற்கு உரியதாகும்.

பாஜகவின் இந்த முயற்சியை முறியடித்து கோயில் நிலங்களில் பல தலைமுறைகளாக குடியிருந்து வரும் ஏழை, எளிய, தாழ்த்தப்பட்ட, பிற்பபடுத்தப்பட்ட மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்குவதற்கான திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தி உடனடியாக வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும்.

என தமிழக அரசை வற்புறுத்துவதுடன், நீதிமன்றங்கள் இதற்கான தடையாணைகளை ரத்து செய்ய வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறோம்”.

இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x