தர்ஷன் மீது காதலி வழக்கு: சென்னை காவல்துறை அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு

தர்ஷன் மீது காதலி வழக்கு: சென்னை காவல்துறை அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

பிக்பாஸ் 3-வது சீசன் போட்டியாளர் தர்ஷன் மீது அவரது காதலி சனம் பிரசாத் அளித்த புகாரில், பதிவான வழக்கின் நிலை குறித்த அறிக்கையைத் தாக்கல் செய்ய சென்னை காவல் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தற்போதைய பிக்பாஸ் சீசனில் பங்கேற்றுள்ள சனம் பிரசாத்தும், பிக்பாஸ் 3-வது சீசனில் பங்கேற்றுப் பிரபலமடைந்த மாடலிங் கலைஞர் தர்ஷனும் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் சனம் சென்னை காவல்துறையில் புகார் ஒன்றை அளித்தார்.

அதில், “தர்ஷன் தன்னைக் காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் கூறியதை நம்பி அவருடன் நெருக்கமாகப் பழகினேன். அவருடைய முன்னேற்றத்திற்காகப் பல லட்சம் செலவு செய்த நிலையில், பிரபலம் அடைந்தவுடன், திருமணம் செய்ய மறுக்கிறார். சமூக வலைதளங்களில் என்னைப் பற்றி தரக்குறைவாக விமர்சனம் செய்து என்னையும் என் குடும்பத்தையும் இழிவு படுத்தியுள்ளார்” என்று சனம் பிரசாத் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சனம் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. புகாரைத் தொடர்ந்து வழக்குப் பதிவுசெய்த நிலையில், அதற்குப் பிறகு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரியும் சனம் பிரசாத் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

அந்த மனுவில், “சென்னை காவல் துறையினர் புகாரைப் பெற்று வழக்குப் பதிவு செய்துள்ள நிலையில், வழக்கு இன்னும் விசாரணை அளவிலேயே உள்ளது. வழக்கில் போடப்பட்ட பிரிவுகள் உரிய பிரிவுகளாக இல்லை. தர்ஷன் தரப்பில் எனக்குக் கொலை மிரட்டல் விடுத்தது, சமூக வலைதளங்களில் இழிவுபடுத்தியது தொடர்பாக உரிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கக் காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும்” எனக் கோரியுள்ளார்.

இந்த மனு நீதிபதி ரவீந்திரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. சனம் பிரசாத்தின் வழக்கு குறித்து மூன்று வாரத்திற்குள் பதில் அளிக்க காவல்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி, அடையாறு மகளிர் காவல் நிலையத்தில் தர்ஷன் மீது பதிவான வழக்கின் விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in