திமுகவின் ஊதுகுழல் அதிமுக; திருச்சியில் பாஜக நடத்திய ஆர்ப்பாட்டத்தில் முழக்கம்: மறியலில் ஈடுபட்ட 225 பேர் கைது

சாலை மறியலில் ஈடுபட்ட பாஜகவினர். | படம்: ஞானவேல்முருகன்
சாலை மறியலில் ஈடுபட்ட பாஜகவினர். | படம்: ஞானவேல்முருகன்
Updated on
1 min read

திமுகவின் ஊதுகுழலாக அதிமுக செயல்படுகிறது என்று, திருச்சியில் பாஜகவினர் முழக்கங்கள் எழுப்பினர். சாலை மறியலில் ஈடுபட்ட 25 பெண்கள் உட்பட பாஜகவினர் 225 பேரை போலீஸார் கைது செய்தனர்.

பாஜக சார்பில் திருத்தணியில் நவ.6-ல் தொடங்கி, திருச்செந்தூரில் டிச.6-ல் நிறைவு செய்யும் வகையில் வேல் யாத்திரை நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், வேல் யாத்திரைக்குத் தமிழ்நாடு அரசு அனுமதி அளிக்காத நிலையில், தடையை மீறி யாத்திரை நடத்தப்படும் என்று பாஜக கூறி வந்தது. மேலும், யாத்திரைக்கு அனுமதி மறுக்கப்பட்டதைக் கண்டித்து, மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என்றும் அறிவித்தது.

இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபடுவதற்காக திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இன்று (நவ. 6) பாஜகவினர் சுமார் 300க்கும் அதிகமானோர் திரண்டிருந்தனர். 2 மணி நேரத்துக்கும் மேலாக காத்திருந்த அவர்கள், திடீரென பிற்பகல் 12.45 மணியளவில் ஆட்சியர் அலுவலகச் சாலையில் சிறிது தொலைவு ஊர்வலமாகச் சென்று அதே சாலையில் நேதாஜி தெரு சந்திப்பில் மறியலில் ஈடுபட்டனர்.

பாஜக மாவட்டத் தலைவர் ராஜேஷ்குமார் தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தின்போது, வேல் யாத்திரைக்கு அனுமதி அளிக்காத தமிழ்நாடு அரசைக் கண்டித்தும், யாத்திரைக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியும், திமுகவின் ஊதுகுழலாக அதிமுக செயல்படுவதாகக் குற்றம் சாட்டியும் பாஜகவினர் முழக்கங்களை எழுப்பினர். இதையடுத்து, சாலை மறியலில் ஈடுபட்ட 25 பெண்கள் உட்பட பாஜகவினர் 225 பேரை போலீஸார் கைது செய்தனர்.

கைது செய்யப்படுவதற்கு முன் பாஜக மாநில இணைப் பொருளாளர் சிவசுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறும்போது, "வேல் யாத்திரைக்கான ஏற்பாடுகளை ஒரு மாத காலமாக பாஜக மேற்கொண்டு வந்தது. இந்த விவரம் தமிழ்நாடு அரசுக்கும், நீதிமன்றத்துக்கும் தெரியும். முன்கூட்டியே யாத்திரைக்கு அனுமதி மறுப்பு என்ற தகவலைக் கூறியிருந்தால் வேறு ஏற்பாட்டைச் செய்திருப்போம்.

பல்வேறு அரசியல் கட்சிகளின் போராட்டங்கள், கூட்டங்களுக்குத் தடை விதிக்காத தமிழ்நாடு அரசு, எங்களை மட்டும் தடை செய்கிறது. அரசு சார்பில் பல்வேறு மாவட்டங்களில் 500க்கும் அதிகமான மக்கள் பங்கேற்கும் அரசு விழாக்களில் தமிழ்நாடு முதல்வரும் கலந்து கொள்கிறார். இந்தச் சூழலில், கரோனா பரவலைக் காரணம் காட்டி வேல் யாத்திரையைத் தடுத்து நிறுத்தியது கண்டிக்கத்தக்கது. எனவே, போராட்டத்தில் ஈடுபட்டோம்" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in