ஆம்பூர் அருகே பழுதாகி சாலையோரம் நின்ற லாரி மீது மற்றொரு லாரி மோதி விபத்து; 2 கிளீனர்கள் உயிரிழப்பு - ஓட்டுநர் படுகாயம்

ஆம்பூர் அருகே விபத்துக்குள்ளான லாரியைப் போக்குவரத்துக் காவல் துறையினர் அப்புறப்படுத்தினர்.
ஆம்பூர் அருகே விபத்துக்குள்ளான லாரியைப் போக்குவரத்துக் காவல் துறையினர் அப்புறப்படுத்தினர்.
Updated on
1 min read

ஆம்பூர் அருகே சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பழுதாகி நின்ற லாரி மீது அந்த வழியாக வந்த மற்றொரு லாரி மோதிய விபத்தில் 2 கிளீனர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதுகுறித்து இன்று (நவ. 6) காவல் துறையினர் கூறியதாவது:

"ஆந்திர மாநிலம் குண்டூர் பகுதியில் இருந்து மாடுகளை ஏற்றிக்கொண்டு பொள்ளாச்சி சந்தைக்கு லாரி ஒன்று திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த கன்னிகாபுரம் வழியாக இன்று அதிகாலை 5 மணியளவில் வந்து கொண்டிருந்தது. அப்போது, லாரியின் முன்சக்கரம் பஞ்சரானது. உடனே, ஓட்டுநர் சாலையோராமாக லாரியை நிறுத்தினார்.

இதையடுத்து, அந்த லாரியில் கிளீனராக வேலை பார்த்த குண்டூர் பகுதியைச் சேர்ந்த பாலய்யா (45) என்பவர், பஞ்சரான லாரி டயரைக் கழட்டி மாற்று டயரைப் பொருத்தும் பணியில் ஈடுபட்டார்.

அப்போது, சென்னையில் இருந்து கர்நாடக மாநிலம், பெல்காம் துறைமுகத்துக்குத் தார்ப்பாய்களை ஏற்றிக்கொண்டு வந்த லாரி அதிவேமாக வந்து, பழுதாகி சாலையோரம் நின்றிருந்த லாரி மீது பின்பக்கமாக மோதியது. இதில், பஞ்சராகி நின்ற லாரி, முன்பக்கமாக நகர்ந்ததில், லாரி டயரைக் கழட்டிக்கொண்டிருந்த பாலய்யா மீது ஏறி இறங்கியது. இதில், அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

அதேபோல, தார்ப்பாய்களை ஏற்றி வந்த லாரியின் முன்பக்கம் முழுமையாகச் சேதமடைந்ததில், அந்த லாரியில் கிளீனராக வேலை பார்த்த மகாராஷ்டிராவைச் சேர்ந்த கோபால் (32) என்பவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தார்ப்பாய் ஏற்றி வந்த லாரி ஓட்டுநர் காயமடைந்தார்.

இதுகுறித்துத் தகவல் வந்ததும் ஆம்பூர் நகர காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து காயமடைந்த லாரி ஓட்டுநரை மீட்டு சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிறகு, உயிரிழந்த 2 கிளீனர்களின் உடல்களை மீட்ட காவல் துறையினர் பிரேதப் பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அதிகாலை நேரத்தில் ஏற்பட்ட இந்த விபத்தினால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி போக்குவரத்துக் காவல் துறையினர் அங்கு விரைந்து வந்து விபத்தில் சேதமடைந்த லாரியை கிரேன் மூலம் அப்புறப்படுத்தினர்.

பிறகு, போக்குவரத்து நெரிசலை ஒரு மணி நேரத்தில் சரி செய்தனர். இந்த விபத்து குறித்து ஆம்பூர் நகர காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்".

இவ்வாறு காவல் துறையினர் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in