

புதுச்சேரியில் அரசு மருத்துவமனை மற்றும் ஜிப்மரில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 509 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தனியார் மருத்துமனைகளுக்குத் தொற்றாளர்களை அனுப்புவது முற்றிலும் நிறுத்தப்பட்டு ஐந்து மருத்துவக் கல்லூரிகளில் அனைத்துப் படுக்கைகளும் காலியாக உள்ளன. ஒரு தனியார் மருத்துவமனையில் ஒருவர் மட்டுமே சிகிச்சையில் உள்ளார்.
புதுச்சேரியில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை குறைந்து வருகிறது. புதுவையில் நேற்று (நவ. 5) 3,826 பேருக்குக் கரோனா தொற்று பரிசோதனை நடத்தப்பட்டது. இதில், 126 பேருக்குப் புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டது.
நேற்று ஒரே நாளில் புதுவையில் 250, காரைக்காலில் 11, ஏனாமில் 25, மாகேவில் 28 பேர் என 314 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். குணமடைந்தோர் சதவீதம் 93.7 ஆக அதிகரித்துள்ளது.
கரோனாவுக்கு நேற்று யாரும் பலி இல்லை.
வீடுகளில் 1,130 பேர் மட்டுமே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். புதுவை மாநிலத்தில் 510 பேர் மட்டும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் அரசு கோவிட் மருத்துவமனை மற்றும் ஜிப்மரில் 509 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
தனியார் மருத்துவமனையில் ஒருவர் மட்டுமே சிகிச்சையில் உள்ளார். மீதமுள்ள ஐந்து தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தொற்றாளர்களுக்கான படுக்கைகள் முழுவதும் காலியாக உள்ளன.
முகக்கவசம் அணியாத சுற்றுலாப் பயணிகள்
தற்போது புதுச்சேரிக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகையும் அதிகரித்துள்ளது. புதுச்சேரி கடற்கரை மற்றும் முக்கியப் பகுதிகளில் பலர் முகக்கவசம் அணியாமல் செல்கின்றனர்.
புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவிடம் கேட்டதற்கு, "புதுவையில் கரோனா குறைந்துவிட்டது என மக்கள் கருதுகின்றனர். 52 சதவீத மக்கள் 100 சதவீதம் முகக்கவசம் அணிகின்றனர். 20 சதவீதத்தினர் பாதி முகத்தை மட்டும் மறைத்தபடி செல்கின்றனர். மற்றவர்கள் முகக்கவசம் அணியவே இல்லை.
நாடு முழுவதும் கடந்த 4 நாட்களாக கரோனா எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தசரா பண்டிகையால் இந்த எண்ணிக்கை அதிகரித்ததாகத் தெரிகிறது. தற்போது தீபாவளிப் பண்டிகை நெருங்கி வருகிறது. இதனால் மக்கள் நடமாட்டம் பொதுவெளியில் அதிகரித்து வருகிறது. இதனால் நவம்பர் இறுதியில் கரோனா எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் உள்ளது" என்று தெரிவித்தார்.