

வெளிநாடுகளிலிருந்து காளைகளை இறக்குமதி செய்வதைத் தமிழக அரசு நிறுத்த வேண்டும் என மனிதநேய ஜனநாயகக் கட்சியின் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
"தமிழகத்தில் பால் உற்பத்தியைப் பெருக்கும் திட்டத்துடன், மாடுகளிடையே இனப்பெருக்கத்தை அதிகரிக்கும் வகையில் வெளிநாடுகளில் இருந்து காளைகள் மற்றும் பசுக்களைத் தமிழக அரசு இறக்குமதி செய்து வருகிறது. மரபணு மாற்றம் செய்யப்பட்ட கலப்பினக் காளைகள் மற்றும் பசுக்களை ஐரோப்பிய நாடுகளிலிருந்து இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தேசிய பால்வள அபிவிருத்தி வாரியத்தின் அனுமதியுடன், தமிழ்நாடு அரசின் கால்நடை பராமரிப்புத் துறை இறக்குமதி செய்து வருகிறது.
அந்த வகையில் சமீபத்தில் ஜெர்மனியிலிருந்து 105 ஜெர்சி ரகக் காளைகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இந்த வகையான கால்நடைகள் ஐரோப்பிய மரபணுக்களுக்கும், பருவ காலத்திற்கும் ஏற்றவை. இறைச்சிக்காகவும், அதிகப் பால் உற்பத்திக்காகவும் மரபணு மாற்றங்களுடன் செயற்கை வழியில் உருவாக்கப்படுபவை.
இந்த ரக மாடுகள் தமிழகம் போன்ற வெப்ப மண்டலப் பகுதிகளுக்கு ஏற்றவை அல்ல. இவை தமிழக மக்களின் உடல் நலத்திற்கும், தமிழகத்தின் தட்பவெப்ப நிலைகளுக்கும் பொருத்தமற்றவையாகும். குளிர்ப் பிரதேசங்களைச் சேர்ந்த அந்த மாடுகளிடம், திமில் மற்றும் வியர்வை நாளங்கள் இல்லாததால், அதன் வெப்பம் பால் மற்றும் சிறுநீர் வழியாகவே வெளியேறும் என்றும், அவற்றின் சாணமும், சிறுநீரும் நம் விவசாய நிலத்திற்குப் பயனற்றவை என்றும் கூறப்படுகிறது.
அதிகமான பால் உற்பத்தி என்ற பெயரில், தொழிற்சாலையில் உற்பத்தி செய்வது போன்ற இந்த ரக மாடுகளை, நமது ரக மாடுகளுடன் கலப்பினம் செய்வதால் ஏற்படும் சாதக, பாதகங்களைச் சற்று நிதானமாக யோசிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.
நமது நாட்டின் பாரம்பரிய மாடு இனங்கள் அழிவதற்கு இது வழிவகுத்து விடக்கூடாது என்பதில் அதிக அக்கறை தேவை என்பதையும் சுட்டிக் காட்டுகிறோம். இதில் விவசாயிகள் வாழ்வாதாரம், மக்களின் அன்றாடத் தேவை, சந்ததிகளின் ஆரோக்கியம், பாரம்பரியக் கால்நடைகளின் பாதுகாப்பு ஆகியவையும் அடங்கியுள்ளது.
இதற்கு மாற்றாக நம் மண்ணின் மரபுகளுக்கேற்ற கால்நடைகளிலிருந்து அதிகமான பால் உற்பத்தியை எவ்வாறு செய்வது என்பது குறித்த ஆராய்ச்சிகளைத் தீவிரப்படுத்துவதும், நமது மாடு இனங்களைச் சர்வதேச சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்வது குறித்துத் திட்டமிடுவதும், நமது நாட்டு ரக மாடுகளின் மூலம் பால் உற்பத்தியில் ஏற்றுமதி நிலையை அடைவது குறித்தும் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.
ஏற்கெனவே பாலில் நடைபெறும் கலப்படம் காரணமாக ஒவ்வாமை மற்றும் நரம்பு மண்டலக் கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் மக்களிடம் அதிகரித்து வரும் நிலையில், நமது மண்ணுக்கும், மரபுக்கும் ஒத்துவராத குளிர்ப் பிரதேசத்து மாடுகளின் கலப்பினம் மூலம் உற்பத்தியாகும் பாலின் ஆரோக்கியம் குறித்து அதிகம் கவலைப்பட வேண்டியுள்ளது.
எனவே தமிழக அரசு இந்த ரகக் காளைகளை இறக்குமதி செய்வதை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் இதன் சாதக பாதங்கள் குறித்து ஆராயக் குழு அமைப்பது குறித்து யோசிக்க வேண்டும் எனவும் மனிதநேய ஜனநாயகக் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்."
இவ்வாறு தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.