

கரோனா தடுப்புப் பணிகளுக்காக 9 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கி இருக்கும் தமிழக அரசு, கரோனா களத்தில் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாது சேவையாற்றி வரும் அரசு மருத்துவர்களுக்கு உரிய ஊதிய உயர்வை வழங்கிட வேண்டும் என அரசு மருத்துவர்கள் மற்றும் பட்டமேற்படிப்பு நிர்வாகிகள் சங்கத்தின் மாநில நிர்வாகி டாக்டர் பெருமாள் பிள்ளை கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
''கரோனா தொற்று உலகையே உலுக்கினாலும் தமிழகத்தில் கரோனா தடுப்புப் பணிகள் சிறப்பாக நடைபெறுகின்றன. தமிழகத்தில் கரோனா பாதிப்பால் மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதோடு, ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு மருத்துவர்களுக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது. இருப்பினும் மருத்துவர்கள் தங்கள் உயிரைப் பற்றிக்கூடக் கவலைப்படாமல் அர்ப்பணிப்போடு பணி செய்து வருகிறார்கள்.
அரசு மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகள் மட்டுமன்றி மற்ற நோயாளிகளும் சிகிச்சைக்கு வருவது அதிகரித்துள்ளது. இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அரசு மருத்துவமனைகளில் பிரசவங்கள் அதிகமாக நடக்கின்றன. தற்போது கரோனா அச்சத்தால் தனியார் மருத்துவமனைகளில் பெரும்பாலும் கூட்டத்தைத் தவிர்ப்பதால், அரசு மருத்துவமனைகளில் பிரசவங்கள் மேலும் அதிகரித்துள்ளன. இதனால் அரசு மருத்துவர்களுக்கு வேலைப் பளுவும் அதிகரித்துள்ளது.
ஒருபுறம் கரோனாவால், தங்கள் உயிருக்கே உத்தரவாதம் இல்லாத நிலை இருந்தும் அரசு மருத்துவர்கள் பணி செய்கிறார்கள். இன்னொருபுறம் அதிகமான பணிச் சுமையால் அவர்கள் அழுத்தப்படுகின்றனர். அர்ப்பணிப்புடன் பணியாற்றினாலும் தங்களுக்கு உரிய ஊதியம் வழங்கப்படவில்லை என்ற வருத்தம் அரசு மருத்துவர்களுக்கு இருக்கிறது.
சுகாதாரத் துறையில் தமிழகம் முன்னணி மாநிலமாக உள்ளது. அதனால்தான் கரோனா தடுப்புப் பணிகளில் தமிழகம் மிகச் சிறப்பாக செயல்பட்டு, கரோனா உயிரிழப்புகள் குறைவாக உள்ளதுடன் குணமடைந்தோர் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது.
கரோனா தடுப்புப் பணிகளுக்காக ரூ.9 ஆயிரம் கோடி ஒதுக்கியுள்ள அரசு, அரசு மருத்துவர்களின் ஊதிய உயர்வுக் கோரிக்கையை நிறைவேற்ற மறுத்து வருவது மருத்துவர்கள் மத்தியில் ஆதங்கத்தையும், வேதனையையும் ஏற்படுத்தி உள்ளது.
சுகாதாரத் துறைச் செயல்பாடுகளில் 25-வது இடத்திலுள்ள பிஹார் உள்ளிட்ட மாநிலங்களில்கூட மருத்துவர்களுக்குத் தகுதிக்கேற்ற ஊதியம் தரப்படுகிறது. ஆனால், முன்னணி மாநிலமாக உள்ள தமிழகத்தில் அரசு மருத்துவர்களுக்கு உரிய ஊதியம் தரப்படவில்லை.
தமிழக சுகாதாரத் துறையின் செயல்பாடுகள் குறித்துத் தொடர்ந்து அரசு பெருமையாகப் பேசிவருகிறது. இதற்கிடையே, கர்நாடகாவில் அரசு மருத்துவர்கள் போராட்டத்தைத் தொடங்கும் முன்னரே மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் மட்டும் அரசு மருத்துவர்களின் ஊதியக் கோரிக்கையை நிறைவேற்ற மறுப்பது எந்த வகையில் நியாயம்?
நீட் தேர்வால் கிராமப்புற மற்றும் ஏழை மாணவர்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக அறிவிப்பை வெளியிட்டுள்ள முதல்வரைப் பாராட்டுகிறோம். ஆனால், ஏழை மாணவரை மருத்துவராக்கினால் போதுமா? மருத்துவராகி அரசுப் பணியில் நுழையும்போது, அந்த முதல் தலைமுறை டாக்டருக்கு உரிய ஊதியத்தை வழங்க வேண்டாமா?
மருத்துவர்கள் கடவுளுக்கு இணையானவர்கள் எனத் தமிழக முதல்வரே சொல்கிறார். எவ்வளவு நிதிச்சுமை ஏற்பட்டாலும் மக்களின் உயிரைக் காப்பாற்றுவது அரசின் கடமை என்றும் அவரே சொல்கிறார். ஆனால், இன்னொரு புறம் உயிர் காக்கும் மருத்துவர்களுக்கு உரிய ஊதியம் மறுக்கப்படுவதுடன் இடமாற்றம் மற்றும் 17பி குற்றக் குறிப்பாணையுடன் மருத்துவர்கள் தண்டிக்கப்பட்டும் வருகிறார்கள்.
அரசு மருத்துவர்களை அரவணைத்துச் செல்ல வேண்டிய நேரம் இது; தண்டிக்க வேண்டிய நேரமல்ல என்பதை உணர்ந்து, உயிர் காக்கும் அரசு மருத்துவர்களின் ஊதிய உயர்வுக் கோரிக்கையை அரசு உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் மருத்துவர்கள் இன்னும் உற்சாகமாகப் பணி செய்ய முடியும்''.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.