

பாஜகவின் வேல் யாத்திரை விவகாரத்தில் சட்டம் தன் கடமையைச் செய்யும் என, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் பழனிசாமி இன்று (நவ. 6) நீலகிரி மாவட்டம் உதகை தமிழகம் அரசினர் விருந்தினர் மாளிகையில் மாவட்ட வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் கரோனா நோய்த் தடுப்புப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றார்.
இதையடுத்து, அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"தமிழக அரசின் நடவடிக்கையால் கரோனா தொற்று குறைந்து வருகிறது. நாள்தோறும் பதிவாகும் கரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2,500க்கும் குறைவாக இருக்கிறது. மற்ற மாநிலங்களைக் காட்டிலும் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதன் பலன் இன்று கிடைத்திருக்கிறது. அரசின் பல்வேறு துறைகளின் முயற்சியால் தொற்றுப் பரவல் குறையத் தொடங்கியிருக்கிறது.
பள்ளிகள் திறப்பு விவகாரத்தில் பெற்றோர்களின் கருத்துக்கு ஏற்ப முடிவு செய்யப்படும்.
மருத்துவப் படிப்பில் அரசு மாணவர்களுக்கு மட்டுமே 7.5% உள் ஒதுக்கீடு வழங்கப்படும்.
மலை மாவட்டங்களில் நில அமைப்பு காரணமாக நோய்ப் பரவல் அதிகரிக்கும் என்பதால் சுற்றுலாப் பயணிகள் கட்டுப்பாடுகளுடனே அனுமதிக்கப்படுகின்றனர். இதனால், சுற்றுலாத் தலங்களைத் திறக்க வாய்ப்பில்லை. நீலகிரி மாவட்டத்தில் அவசர மருத்துவத் தேவைக்காக 'ஏர் ஆம்புலன்ஸ்' சேவை தொடங்க முயற்சி எடுக்கப்படும்.
பள்ளி, கல்லூரிகள் திறப்பு குறித்து 9 ஆம் தேதி பெற்றோர், ஆசிரியர்களிடம் கருத்துக் கேட்ட பின்னர் முடிவு செய்யப்படும்".
இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.
அப்போது, தமிழக அரசு அனுமதி அளிக்காத நிலையில், தடையை மீறி தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், திருவள்ளூர் மாவட்டம் நசரத்பேட்டையில் வேல் யாத்திரையைத் தொடங்கியிருப்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்குப் பதிலளித்த முதல்வர் பழனிசாமி, ''சட்டம் தன் கடமையைச் செய்யும்'' எனத் தெரிவித்தார்.