

மேட்டுப்பாளையம் வனக் கல்லூரியில் 15 ஏக்கரில் உயர் மதிப்புக் காடுகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இதேபோல் 1 லட்சம் உள்ளூர் மர விதைப் பந்துகளும் விதைக்கப்பட்டு வருகின்றன.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ், கோவை மேட்டுப்பாளையத்தில் வனக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் உயர் மதிப்புக் காடுகள் அமைக்கப்பட உள்ளன. இத்திட்டத்தை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் என்.குமார், தமிழ்நாடு கூடுதல் தலைமை வனப்பாதுகாவலர் அன்வர்தீன் ஆகியோர் இன்று தொடங்கி வைத்தனர்.
இதுகுறித்துத் துணைவேந்தர் என்.குமார் கூறியதாவது:
''நாட்டின் பசுமை வளத்தை அதிகரிக்கக் காடுகளைப் பெருக்குவது வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் முதன்மையான நோக்கமாகும். இந்த இலக்கை அடைவதற்கும், நிறுவனத்தின் பொருளாதார நிலைத்தன்மையை அதிகரிப்பதற்கும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், உயர் மதிப்புள்ள காடுகளை உருவாக்குவதற்கான ஒரு முன்னோடி முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்படி செம்மரம், தேக்கு, சந்தனம், டூன் ஆகிய மரங்களைக் கொண்ட உயர் மதிப்புக் காடுகள் உருவாக்கப்பட உள்ளன. இதேபோல் நமது பூர்வீக மரங்களின் மறு சீரமைப்புச் செயல்முறையை வளப்படுத்தவும், வட்டாரத்தின் சுற்றுச்சூழல் அமைப்பை அதிகரிக்கவும் 1 லட்சம் பூவரசு, சந்தனம், பூச்சக்காய், வேம்பு, புங்கம், வாகை, புளியமர விதைப்பந்துகள் நடப்பட்டு வருகின்றன. இக்காடுகள் சுமார் 15 முதல் 20 ஆண்டுகளுக்குப் பிறகு வனக் கல்லூரிக்கு நிலையான வருவாயைப் பெற்றுத் தரும்''.
இவ்வாறு துணைவேந்தர் குமார் கூறினார்.
அதன் பின்னர் நாற்றாங்கால் பண்ணை, மர மதிப்புக்கூட்டல் மற்றும் பாதுகாப்பு ஆய்வகமும் திறந்து வைக்கப்பட்டது. வேளாண் காடுகள் தொழில் முனைவோர் மேம்பாட்டு மையம் மூலம் உருவாக்கப்பட்ட தேன் மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தி பூஸ்டர் போன்ற தயாரிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டன. வன விலங்குகளுக்கான புதிய செயலி உட்படப் பல்வேறு புத்தகங்களும் வெளியிடப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் வனக் கல்லூரி முதல்வர் கா.த.பார்த்திபன், வேளாண் காடுகள் துறைத் தலைவர் ஐ.சேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.