Published : 06 Nov 2020 11:29 AM
Last Updated : 06 Nov 2020 11:29 AM

எழுவர் விடுதலை; அனைத்துக் குழப்பங்களையும் செய்தது அதிமுக அரசுதான்: திமுக குறித்து குற்றம் சாட்டுவதா?- பொன்முடி கண்டனம்

தனது அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மானத்திற்கே இரண்டு ஆண்டுகளாக ஆளுநரிடம் ஒப்புதல் பெற முடியாமல் தவிக்கும் முதல்வர், கீழ்த்தரமான அரசியல் செய்யாமல், ஆளுநரை வலியுறுத்தி 7 பேர் விடுதலைக்கு உடனே ஒப்புதல் பெற வேண்டும் என, திமுக துணைப் பொதுச் செயலாளர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

எழுவர் விடுதலை குறித்து நேற்று (நவ. 5) கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பழனிசாமி, "7 பேரின் விடுதலை குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து பேசி வருகிறார். 2000-ம் ஆண்டில் திமுக ஆட்சியின் போது, 7 பேர் விடுதலை தொடர்பான கோரிக்கை வந்தபோது, அவர்களது அமைச்சரவையில் நளினியைத் தவிர்த்து மற்றவர்களின் கோரிக்கையை நிராகரித்தனர். இவர்களுக்கு தண்டனை கொடுக்கலாம் என அமைச்சரவையில் திமுகவினர் முடிவு எடுத்தனர். இந்த நிலையில் அதிமுக ஆட்சியின் போது, 7 பேரையும் விடுதலை செய்ய அதிமுக அரசு நடவடிக்கை எடுத்தது. தீர்மானம் நிறைவேற்றியது. 7 பேரின் விடுதலையில் அதிமுக அரசு அக்கறையுடன் செயல்படுகிறது" எனத் தெரிவித்தார்.

இந்நிலையில், முதல்வரின் விமர்சனத்திற்குப் பதிலளிக்கும் விதமாக, திமுக துணைப் பொதுச் செயலாளர் பொன்முடி இன்று (நவ. 6) வெளியிட்ட அறிக்கை:

"நளினிக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து 2000-ம் ஆண்டே உத்தரவிட்டது திமுக அரசுதான்! உச்ச நீதிமன்றம் தண்டனையை உறுதி செய்த ஒரே ஆண்டில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு இப்போது ஞாபகம் இருக்காது. 2011-ல் ஆட்சிக்கு வந்தவுடன் இவர்களின் கருணை மனுவை நிராகரிக்க வேண்டும் என்று வாதிட்டது இதே அதிமுக அரசுதான்!

இன்றைக்கு 30 ஆண்டுகளாகச் சிறையில் வாடுகின்ற நேரத்தில் 7 பேரின் விடுதலையில் அனைத்துக் குழப்பங்களையும் செய்தது அதிமுக அரசுதான். உச்ச நீதிமன்றமே உத்தரவிட்டும் ஆறு ஆண்டுகளாக இவர்களின் விடுதலையைத் தாமதம் செய்துகொண்டிருப்பதும் அதிமுக அரசுதான்!

முதலில் 2014 தேர்தலுக்காக, ஏழு பேரின் விடுதலையில் மத்திய அரசுக்கு மூன்று நாள் கெடு விதித்து இவர்களின் விடுதலையைத் தாமதம் செய்தது அதிமுக அரசு. இப்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி, இரண்டு ஆண்டுகள் அமைதி காத்துவிட்டு, இப்போது எங்கள் திமுக தலைவர் கோரிக்கை வைத்த உடன் பதற்றப்படுகிறார் பழனிசாமி.

தனது அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மானத்திற்கே ஆளுநரிடம் ஒப்புதல் பெற முடியாமல் தவிக்கும் முதல்வருக்கு, திமுக குறித்துக் குற்றம் சாட்டுவதற்கு எந்தத் தகுதியும் இல்லை.

தயவுசெய்து இதிலும் கீழ்த்தரமான அரசியல் செய்யாமல், நேராக ஆளுநர் மாளிகைக்குச் செல்லுங்கள். ஆளுநரை வலியுறுத்தி 7 பேர் விடுதலைக்கு உடனே ஒப்புதல் பெறுங்கள் என்று முதல்வரைக் கேட்டுக் கொள்கிறேன்".

இவ்வாறு பொன்முடி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x