Published : 06 Nov 2020 10:53 AM
Last Updated : 06 Nov 2020 10:53 AM

பாஜக அரசின் இந்தி ஆதிக்க மொழித் திமிரை அடக்குவோம்: வைகோ

வைகோ: கோப்புப்படம்

சென்னை

பாஜக அரசின் இந்தி ஆதிக்க மொழித் திமிரை அடக்குவோம் என, மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, வைகோ இன்று (நவ. 6) வெளியிட்ட அறிக்கை:

"திராவிடர் கழகத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் குமாரதேவன் அவர், மத்திய நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை அமைச்சகத்திற்கு, கடந்த ஆகஸ்டு 26 ஆம் தேதி, தகவல் பெறும் உரிமைச் சட்டப்படி, 'ஆயுர்வேத மருத்துவ மையங்களின் வளர்ச்சிக்காக கடந்த 2014-15 ஆம் ஆண்டு முதல் 2020-21 ஆம் ஆண்டு வரையில் ஒதுக்கீடு செய்த நிதி எவ்வளவு? அதே போன்று மேற்கண்ட ஆண்டுகளில், சித்தா மற்றும் யுனானி மருத்துவ மையங்களுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது?' என விளக்கங்கள் கேட்டுக் கடிதம் அனுப்பி இருந்தார்.

இந்தியா முழுவதும் இயங்கி வரும் ஆயுர்வேதம், சித்தா மற்றும் யுனானி மருத்துவ மையங்கள் பற்றிய முழு விபரங்கள் மற்றும் அவற்றில் பணிபுரியும் ஊழியர்கள் பற்றிய விபரங்கள் வேண்டும் என்றும் கேட்டு இருந்தார்.

மேற்கண்ட கேள்விகளுக்கு மத்திய ஆயுஷ் அமைச்சகம் முழுக்க முழுக்க இந்தியிலேயே பதில் அளித்து இருக்கின்றது. பதில் கடிதத்தின் உறையில்கூட முகவரியை இந்தியில் எழுதி அனுப்பி இருக்கின்றார்கள்.

தமிழ்நாட்டில் இருந்து ஆங்கிலத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு, ஆயுஷ் அமைச்சகம் இந்தியில் விடை அளித்து இருப்பது பாஜக அரசின் இந்தி ஆதிக்கத் திமிரைக் காட்டுகின்றது. இதை ஒருபோதும் பொறுத்துக் கொள்ள முடியாது.

இதே ஆயுஷ் அமைச்சகம் சார்பில், ஆகஸ்டு 18 ஆம் தேதி காணொளியில் நடத்திய பயிற்சி முகாமில் தமிழகம், கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்களைச் சேர்ந்த இயற்கை யோகா மருத்துவம் பயின்ற மருத்துவர்கள் பங்கு பெற்றனர். அப்போது, தமிழ்நாட்டில் இருந்து கலந்துகொண்ட மருத்துவர் சௌந்திர பாண்டியன் ஆங்கிலத்தில் சில விளக்கங்களைக் கேட்டபோது, அவரை ஆயுஷ் அமைச்சகச் செயலாளர் வைத்யா ராஜேஷ், இந்தியில் கேட்குமாறு கூறியுள்ளார். இந்தி மொழி தெரியாது என்று மருத்துவர் கூறியவுடன், இந்தி தெரியாவிட்டால் வெளியேறுங்கள் என்று கொக்கரித்தார். அதற்குக் கடும் எதிர்ப்புகள் எழுந்த பின்னரும், மத்திய ஆயுஷ் அமைச்சகம் தனது போக்கை மாற்றிக்கொள்ளவில்லை.

காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன், கடந்த ஜூலை 16, 2020 அன்று, காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைமையகத்தின் அலுவலகம் செயல்படுகின்றதா? காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் இப்பணியில் முழுநேர அதிகாரியாக இருக்கின்றாரா? கூடுதல் பொறுப்பாகக் கவனிக்கின்றாரா? காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் ஒழுங்காற்றுக் குழுவுக்கு அமர்த்தப்பட்ட முழு நேர அதிகாரிகள் எத்தனை பேர்? நடப்பாண்டில் ஜூன், ஜூலை மாதங்களுக்குரிய சாகுபடிக்கு உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி கர்நாடகா மாநிலம் தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்து விட்டுள்ளதா? உள்ளிட்ட 8 கேள்விகளை தகவல் பெறும் உரிமைச் சட்டப்படி மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்திடம் தகவல் கேட்டு இருந்தார்.

இதற்கு மத்திய நீர்வளத்துறை இந்தியில் பதில் அனுப்பி இருந்தது. இவையெல்லாம் தற்செயலான நிகழ்வுகள் என்று கருத முடியாது. மத்திய பாஜக அரசு திட்டமிட்டு இந்தி ஆதிக்கத்தை நிலைநாட்ட வலிந்து இந்தி மொழியைத் திணித்து வருகின்றது.

இந்தி பேசாத மாநிலங்களின் அலுவல் மொழியாக இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 343(2) பிரிவின்படி, ஆங்கில மொழி தொடருகின்றது. இதில் 1963 இல் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தின்படி, சட்டப் பிரிவு 343(3) இன் கீழ் ஆங்கிலம் மத்திய, மாநில அரசுகளுக்கு இடையேயான தொடர்பு மொழியாக நீடிக்கின்றது.

இதையெல்லாம் பொருட்படுத்தாமல், இந்தி எதேச்சாதிகாரத்தை நிலைநாட்டத் துடிக்கும் மத்திய பாஜக அரசுக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கின்றேன். இந்துத்துவ சனாதனக் கூட்டத்தின் இந்தி, சமஸ்கிருத ஆதிக்க மொழித் திமிரை தமிழக மக்கள் அடக்கியே தீருவார்கள்".

இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x