Published : 06 Nov 2020 03:17 AM
Last Updated : 06 Nov 2020 03:17 AM

சுகாதாரம், சரக்கு மேலாண்மை குறித்த பயிற்சிக்காக உயர் திறன் மேம்பாட்டு மையங்கள்: சென்னை கிண்டி, ஒரகடத்தில் முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்

சுகாதார நலன், சரக்கு நகர்வு மேலாண்மை தொடர்பாக உயர் திறன் மேம்பாட்டு பயிற்சிகள் அளிக்கும் வகையில் தொழிலாளர் நலன், வேலைவாய்ப்பு துறை சார்பில் சென்னை கிண்டி மற்றும் காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் அமைக்கப்பட்டுள்ள உயர் திறன் மேம்பாட்டு மையங்களை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு முதலீட்டு மேம்பாட்டு திட்டம் 2-வது நிலையின் ஒரு பகுதியாக ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகமை - தமிழக அரசு இடையே 50 சதவீத விகிதாச்சார பங்களிப்புடன் ரூ.20 கோடி திட்ட மதிப்பீட்டில் சுகாதார நலனுக்கான தமிழ்நாடு உயர் திறன் மேம்பாட்டு மையம் அமைக்க நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, தமிழக அரசு சார்பில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் பங்காக ரூ.1 கோடி, தொழில் நிறுவன கூட்டமைப்பின் சரிசமப் பங்காக காவேரி மருத்துவமனையின் பங்களிப்பு ரூ.1 கோடி என பொது மற்றும் தனியார் கூட்டமைப்பாக லாப நோக்கமற்ற நிறுவனமாக சுகாதார நலனுக்கான தமிழ்நாடு உயர்திறன் மேம்பாட்டு மையம் சென்னை கிண்டியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தை முதல்வர் பழனிசாமி நேற்று திறந்து வைத்தார்.

இந்த மையத்தில் உலகத் தரம் வாய்ந்த உட்கட்டமைப்பு வசதிகள் கொண்ட வகுப்பறைகள், ஆடியோ காட்சி விரிவுரை அரங்கம், நிர்வாக அலுவலகங்கள், மாநாடுமற்றும் உட்கூட்ட அரங்குகள் போன்ற கட்டமைப்பு வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன்மூலமாக மருத்துவர்கள், செவிலியர்கள், நிர்வாகப் பணியாளர்கள் மற்றும் அனைத்து நிலை சுகாதார பணியாளர்களுக்கும் உயர்நிலை திறன் பயிற்சி மற்றும் உயர் தொழில்நுட்ப திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்பட்டு, உயரிய வேலைவாய்ப்பை அவர்கள் பெற உறுதி செய்வதே இம்மையத்தின் முக்கிய நோக்கமாகும்.

இங்கு உலக சுகாதார அமைப்புடன் இணைந்து கரோனா தொற்று தொடர்புடைய பயிற்சி பாடத் திட்டம் தொடங்கப்படுகிறது.

அதேபோல, தமிழக அரசு சார்பில் திறன் மேம்பாட்டு கழகத்தின் பங்காக ரூ.1 கோடி, தொழில்நிறுவன கூட்டமைப்பின் சரிசமபங்காக, சரக்கு நகர்வு மேலாண்மைக்கான திறன் குழுமத்தின் ரூ.1 கோடி பங்களிப்புடன் பொது மற்றும் தனியார் கூட்டமைப்பாக லாப நோக்கமற்ற நிறுவனமாக சரக்கு நகர்வு மேலாண்மை மற்றும் போக்குவரத்து (லாஜிஸ்டிக்ஸ்) பிரிவுக்கான தமிழ்நாடு உயர் திறன் மேம்பாட்டு மையம், காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் உள்ள இன்டோஸ்பேஸ் தொழிற்பூங்காவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தையும் முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார். இந்த மையத்தில் உலகத் தரம் வாய்ந்த உட்கட்டமைப்பு வசதிகளுடன் சரக்கு நகர்வு மேலாண்மை குறித்த உயர் திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.

வாணியம்பாடியில் மையம்

முதல்வர் முன்னிலையில், வாணியம்பாடியில் ரூ.20.37 கோடி செலவில் தோல் பதனிடுதல் துறையில் பல்நோக்குத் திறன் மேம்பாட்டு மையம் அமைக்க மத்திய காலணி பயிற்சி நிறுவனத்துக்கும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்துக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்த நிகழ்ச்சியில், தொழிலாளர் நலத் துறை அமைச்சர் நிலோபர் கபீல், தலைமைச் செயலாளர் க.சண்முகம், தொழிலாளர் நலம், வேலைவாய்ப்பு துறை செயலாளர் முகமது நசிமுதீன், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக இயக்குநர் வி.விஷ்ணு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x