

கோவில்பட்டி தனியார் விடுதியில் ஆயுதங்களுடன் தங்கியிருந்த சென்னையைச் சேர்ந்த பிரபல ரவுடிகள் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னையைச் சேர்ந்த பிரபல ரவுடி கோவில்பட்டியில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருப்பதாக, தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஜெயக்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில், கோவில்பட்டி டிஎஸ்பி கலைக் கதிரவன், மேற்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அய்யப்பன், எஸ்ஐ குருசந்திர வடிவேல் மற்றும் போலீஸார் தனியார் விடுதிக்கு சென்று, ரவுடி தங்கியிருந்த அறையை துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்தனர்.
அறைக்குள் அதிரடியாகப் புகுந்த போலீஸார், அங்கிருந்த 3 பேரைப் பிடித்து, அவர்களிடம் இருந்த 2 அரிவாள்களைப் பறிமுதல் செய்தனர். பின்னர், 3 பேரையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். விசாரணையில் அவர்கள், சென்னை எண்ணூரைச் சேர்ந்த தனசேகரன் (39), சைதாப்பேட்டையைச் சேர்ந்த மதன்குமார் (32), வழக்கறிஞர் அருள்ராஜ் (40) என தெரியவந்தது. தீபாவளிக்கு பட்டாசு வாங்க வந்ததாக அவர்கள் போலீஸாரிடம் தெரிவித்துள்ளனர்.
ரவுடிகள் தனசேகரன், மதன்குமார் ஆகியோர் மீது 10 கொலை வழக்குகள் உட்பட 40 வழக்குகள் இருப்பதும், சென்னை நீதிமன்றத்தில் இருவர் மீதும் பிடி ஆணை உள்ளதும் தெரியவந்தது. 3 பேரையும் போலீஸார் கைது செய்தனர். போலீஸார் சுற்றி வளைத்ததை பார்த்ததும், அவர்களது கார் ஓட்டுநர் சென்னையை சேர்ந்த அம்பேத் (30) என்பவர் தப்பியோடி விட்டார். காரை போலீஸார் பறிமுதல் செய்தனர். 3 பேரையும் போலீஸார் மதுரைக்கு அழைத்துச் சென்று, அங்கு வந்த சென்னை போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.கோவில்பட்டியில் கைது செய்யப்பட்ட சென்னை எண்ணூரைச் சேர்ந்த பிரபல ரவுடி தனசேகரன்.