

மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டியில் நடந்த ஏழூர் அம்மன் திருவிழா, சப்பர ஊர்வலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
டி.கல்லுப்பட்டி, இதைச் சுற்றியுள்ள அம்மாபட்டி, தேவன்குறிச்சி, வன்னிவேலம்பட்டி, காடனேரி, கிளாங்குளம், சத்திரப்பட்டி ஆகிய 7 கிராமங்களிலும் மக்கள் இணைந்து 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏழூர் திருவிழா நடத்துவது வழக்கம்.
இங்கிருந்து சிலைகளை எடுத்து சென்று வழிபடுவதற்காக தங்கள் கிராமங்களில் 40 அடி உயர சப்பரங்களைச் செய்தனர். இந்த சப்பரங்களுடன் அம்மாபட்டிக்கு 6 கிராமங்களைசேர்ந்த மக்கள் நேற்று அதிகாலை ஊர்வலமாகப் புறப்பட்டனர்.
அம்மாபட்டியில் 7 அம்மன்களுக்கும் சிறப்பு பூஜைகள் நடந்தன. பிறகுகல்லுப்பட்டி உட்பட 6 கிராமங்களின் சிலைகளை அந்தந்த ஊர் மக்கள் சப்பரங்களில் வைத்து எடுத்துச் சென்றனர். அடுத்தடுத்து சப்பரங்களுடன் சென்ற இந்த ஊர்வலம் 4 கி.மீ வரை நீண்டிருந்தது.
6 சப்பரங்களும் டி.கல்லுப்பட்டிக்கு வந்தன. இங்கு அனைத்து சப்பரங்களையும், அம்மன்களையும் ஒரே இடத்தில் பார்த்து தரிசிக்க சுற்றுப்பகுதி கிராமத்தினர் லட்சக்கணக்கானோர் திரண்டனர்.
மேளதாளம் முழங்க, பக்தர்கள் ஆட்டம் பாட்டத்துடன் தங்கள் ஊர்களுக்கு அம்மன் சிலைகளைக் கொண்டு சென்றனர். முத்தாலம்மனை தேவன்குறிச்சியில் ஆதிபராசக்தி, கல்லுப்பட்டியில் சரஸ்வதி, வன்னிவேலம்பட்டியில் மகாலட்சுமி, வை.அம்மாபட்டியில் பைரவி, காடனேரியில் திரிபுரசுந்தரி, கிளாங்குளத்தில் சபரி, கி.சத்திரப்பட்டியில் சவுபாக்கியவதியாக வழிபட்டனர்.
600 ஆண்டுகள் பழமையான இத்திருவிழாவில் 7 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பங்கேற்றனர்.அம்மாபட்டியில் வைத்து பூஜிக்கப்பட்ட 7 அம்மன் சிலைகள். படங்கள்:எஸ்.கிருஷ்ணமூர்த்திமதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டியில் நடைபெற்ற ஏழூர் அம்மன் திருவிழா மற்றும் சப்பர ஊர்வலத்தில் கலந்து கொண்ட லட்சக்கணக்கான பக்தர்கள்.
வாக்கு தவறாமல் நடக்கும் திருவிழா
சுமார் 600 ஆண்டுகளுக்கு முன்பு டி.கல்லுப்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள் மழை இன்றி பஞ்சம், நோயால் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.அந்த நேரத்தில் 6 பெண் குழந்தைகளுடன் ஒரு பெண் கல்லுப்பட்டிக்கு வந்தார். அவர்களை ஊர் தலைவரும், மக்களும் உபசரித்து பாதுகாத்தனர். இவர்கள் வந்த பின்னர் கல்லுப்பட்டியிலும், சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் மழை பெய்து விவசாயம் செழித்ததாக பக்தர்கள் நம்புகிறார்கள்.
இந்நிலையில், 7 பேரும் ஊரை விட்டு புறப்படத் தயாராகினர். இதற்கு அனுமதிக்காத கிராமத்தினர் 7 பேரையும் கிராமத்திலேயே தங்குமாறு வேண்டினர். இதைக்கேட்ட 7 பேரும், ‘நாங்கள் தெய்வீகப் பிறவிகள். இந்த பூலோகத்தில் இருந்து கிளம்பும் நேரம் வந்து விட்டது. தீக்குளிக்கப் போகிறோம். எங்கள் சாம்பலை சுற்றியுள்ள கிராமங்களில் தூவுங்கள்’ எனக் கூறிவிட்டு மறைந்ததாக மக்கள் நம்பிக்கை. அவர்களுக்கு அளித்த வாக்குப்படி 2 ஆண்டுக்கு ஒருமுறை ஐப்பசி மாதம் இத்திருவிழா நடக்கிறது.