

தீபாவளியை முன்னிட்டு கடைகளில் இனிப்பு, கார வகைகள் தரமாக தயாரிக்கப்படுகிறதா என்று, நடமாடும் ஆய்வகத்துடன் நேரடியாக கடைகளுக்கு சென்று சோதனை செய்யும் பணிகளை உணவு பாதுகாப்புத் துறை சென்னையில் இன்று தொடங்குகிறது.
தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால், இனிப்பகங்களில் இனிப்பு, கார வகைகள் அதிக அளவில் விற்பனையாகி வருகின்றன. இந்நிலையில், அங்கு இனிப்பு வகைகள் தரமாக தயாரிக்கப்படுகிறதா என்பதை உறுதி செய்ய, நேரடியாக கடைகளுக்கு சென்று ஆய்வு செய்ய உணவு பாதுகாப்பு துறை திட்டமிட்டுள்ளது.
நவீன நடமாடும் ஆய்வகம்
இதுகுறித்து சென்னை மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கூறியதாவது:
தீபாவளி காலங்களில் இனிப்பு வகைகள் அதிக அளவில் விற்பனையாகின்றன. இதனால், அவற்றின் தரத்தை உறுதி செய்ய, நவீன நடமாடும் ஆய்வகம் மூலம் நேரடியாக கடைகளுக்கே சென்று சோதனை நடத்த உள்ளோம்.
இனிப்புகளில் சேர்க்கப்படும் ரசாயன வண்ணம் அனுமதிக்கப்பட்ட அளவில் உள்ளதா, கலப்படம் இல்லாத எண்ணெய், நெய் பயன்படுத்தப்படுகிறதா, பயன்படுத்திய எண்ணெய் மீண்டும் பயன்படுத்தப்படுகிறதா என்று களத்திலேயே ஆய்வு செய்து உடனடியாக முடிவை தெரிவிக்கும் வகையில் நவீன கருவிகளுடன் சோதனை நடத்த உள்ளோம்.
கலப்படம், விதிமீறல் இருந்தால் கடைக்காரர்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்படும். மீண்டும் அதே தவறை செய்தால் அதிகபட்சம் ரூ.5 லட்சம் அபராதம் அல்லது சிறை தண்டனை கிடைக்கும். சென்னையில் இந்த சோதனை நவ.6-ம் தேதி (இன்று) தொடங்குகிறது. தினமும் 100 கடைகளில் ஆய்வு நடத்த திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
கலப்படம், விதிமீறல் இருந்தால் கடைக்காரர்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்படும். மீண்டும் அதே தவறை செய்தால் அதிகபட்சம் ரூ.5 லட்சம் அபராதம் அல்லது சிறை தண்டனை கிடைக்கும்.