

கடலூர் மாவட்டம் சேத்தியாத் தோப்பு அருகே உள்ள மழவராயநல்லூரில் தனது வயலில் விவசாயி ஒருவர் பாரம்பரிய நெல் ரகங்களை பயிரிட்டு வருகிறார். தன்னைப் போலவே மற்றவர்களும் பாரம்பரிய ரகத்திற்கு மாற வேண்டும் என்று வித்தியாசமான முறையில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.
சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது மழவராயநல்லூர் கிராமம். இங்கு, கடந்த பத்தாண்டுகளாக பாரம்பரிய நெல் சாகுபடியில் ஈடுபட்டு வருபவர் விவசாயி செல்வம். தொடக்கத்தில் ஒரே ஒரு பாரம்பரிய நெல் ரகத்தை பயிரிட்டு வந்தவர், தற்போது பதினைந்துக்கும் அதிகமான பாரம்பரிய நெல் ரகங்களை பயிரிட்டு வருகிறார்.
மாப்பிள்ளை சம்பா, ஆத்தூர் கிச்சிலி சம்பா, கருங்குறுவை, கருப்புக் கவுனி, சீரக சம்பா, சிங்கார், ஜாக்கோபார் உட்பட பதினைந்துக்கும் அதிகமான நெல் ரகங்களை பயிரிட்டு வருகிறார்.
பாரம்பரிய நெல் ரகங்களை தன் கிராமத்தில் உள்ள மற்ற விவசாயிகளும் பயிரிட வேண்டும் என்று கூறி, அது பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார் விவசாயி செல்வம்.
அந்த விழிப்புணர்வின் ஒரு பகுதியாக பசுமையான தனது வயலின் நடுவே சில குறியீடுகளை அமைத்துள்ளார். அந்த குறியீடு பகுதிக்குள் மலைப்பிரதேசத்தில் விளையும் கரும் பச்சை நிறத்திலான சிங்கார் நெல் ரகத்தை பயிரிட்டுள்ளார்.
ஏர் கலப்பை, கணிதக் குறியீடுகள், எண்கள் மற்றும் அவருடைய பெயரில் குறியீடு களை உருவாக்கி இந்த ரகத்தை நட்டுள்ளார்.
சுற்றிலும் வெளிர் பச்சையில் பரந்து விரிந்திருக்கும் பராம்பரிய நெல் ரகத்திற்கு நடுவே, கரு நீல பச்சை வண்ணத்தில் இந்த குறியீடுகள் மிளிர, அந்த வயலை கடந்து செல்வோர் இதுபற்றி கேட்க, பாரம்பரிய நெல் ரகத்தின் பயன்கள், சாகுபடி முறைகள் குறித்து விளக்குகிறார் விவசாயி செல்வம்.
“இயற்கை சாகுபடி முறையில், பாரம்பரிய நெல் ரகங்களை நான் மட்டும் பயிரிட்டால் போதாது. மொத்தமாக எனது கிராமம் முழுவதும் மாற வேண்டும். அதற்கான விழிப்புணர்வே இது ” என்கிறார் விவசாயி செல்வம்.