மயிலாடுதுறை அரசு கல்லூரி மாடியில் இருந்து விழுந்த மாணவி பலி

மயிலாடுதுறை அரசு கல்லூரி மாடியில் இருந்து விழுந்த மாணவி பலி
Updated on
1 min read

நாகை மாவட்டம் மயிலாடு துறையில் அரசு மகளிர் கலைக் கல்லூரியின் 2-வது மாடியில் இருந்து கீழே விழுந்த மாணவி உயிரிழந்தார்.

பேரளம் அருகேயுள்ள அண்டக் குடியைச் சேர்ந்தவர் காசிநாதன் மகள் ரம்யா(19). மயிலாடுதுறை தருமபுரம் ஞானாம்பிகை அரசு மகளிர் கலைக் கல்லூரியில் இளநிலை கணினி அறிவியல் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவரது வகுப்புத் தோழி சண்முகப்பிரியா(18).

இவர்கள் இருவரும் அக்டோபர் 10- ம் தேதி மாலை தாங்கள் கொண்டு வந்த மதிய உணவை உண்பதற்காக கல்லூரியில் வகுப்புகள் முடிந்த பிறகு, கல்லூரியின் 2-வது மாடிக்குச் சென்றுள்ளனர்.

அவர்கள் சாப்பிட்டுவிட்டு திரும்பி வருவதற்குள், உள்ளே யாரும் இல்லை என்று நினைத்து, மாடிப் பகுதியின் கதவை கல்லூரியின் காவலாளி பூட்டிவிட்டுச் சென்றுவிட்டாராம்.

இதையடுத்து, மாடியில் இருந்து கீழே இறங்க முடியாமல் போய்விடுமோ என்று எண்ணிய இருவரும், ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்துள்ளனர். கட்டிடத்தின் வெளியே உள்ள சன்ஷேடுகளைப் பார்த்தவுடன் அதன் வழியாக கீழே இறங்க முடிவு செய்துள்ளனர். சண்முகப்பிரியா முதலில் ஜன்னல் வழியாக வெளியேறி 2-வது மாடியில் உள்ள சன்ஷேடில் குதித்து, அங்கிருந்து முதலாவது மாடியில் உள்ள சன்ஷேடில் குதித்து கீழே இறங்கியுள்ளார். அவரைத் தொடர்ந்து கீழே இறங்க முயன்றபோது 2-வது மாடியில் இருந்து ரம்யா தவறி கீழே விழுந்து காயமடைந்தார்.

உடனடியாக இதுகுறித்து, கல்லூரி நிர்வாகத்துக்கு சண்முகப் பிரியா தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரம்யா, உயிருக்கு ஆபத்தான நிலையில், மேல்சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவமனையிலும், பின்னர், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டார். எனினும், சிகிச்சை பலனின்றி நேற்று முன் தினம் மாலை ரம்யா உயிரிழந்தார்.

இதுகுறித்து மயிலாடுதுறை போலீஸார் விசாரித்து வருகின் றனர். இந்நிலையில், மாணவி உயிரிழப்பதற்கு காரணமான கல்லூரி நிர்வாகத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துவதற்காக நேற்று கல்லூரிக்கு வந்த இந்திய ஜனநாயக மாணவர் சங்கத்தினரைத் தடுத்து நிறுத்திய போலீஸார், அங்கிருந்து கலைந்துபோகச் செய்தனர். அரசு மகளிர் கல்லூரி மாடியில் இருந்து விழுந்து மாணவி பலியான சம்பவம் மயிலாடுதுறை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in