

கோபியை அடுத்த சஞ்சீவிராயன் குளம் விவசாயிகளால் தூர்வாரப்பட்ட நிலையில், சமீபத்திய கனமழையால் காட்டாற்று வெள்ளம் குளத்திற்கு வரத் தொடங்கியுள்ளது.
ஈரோடு மாவட்டம் கோபி அருகே சஞ்சீவிராயன் குளம் அமைந்துள்ளது. இக்குளம் 140 ஏக்கர் பரப்பளவில் வனத்திலும், சமவெளியிலும் நீர் பரப்பு கொண்டதாகும்.
பொதுப் பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்குளத்திற்கு கொங்காடை, போளி, தொட்ட கோம்பை, கரும்பாறை ஆகிய அடர் வனப்பகுதிகள் நீர் ஆதாரமாக உள்ளன.
இப்பகுதியில் உள்ள விவசாயிகள், இளைஞர்களை ஒன்றிணைத்து குளத்தை தூர் வாரி, கரைகளைப் பலப்படுத்தும் வகையில்,சஞ்சீவிராயன் குளம் பாசன விவசாயிகள் சங்கம் என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இக்குளத்தால் பயன்பெறும் விவசாயிகள் சங்கத்தின் நிர்வாகிகளாக நியமிக்கப் பட்டுள்ளனர். மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறையினரின் அனுமதியுடன் குளத்தைத் தூர் வாரும் பணி நடந்தது.
காட்டாற்று வெள்ளம்
தொடர்ச்சியாக நடந்த தூர்வாரும் பணியில், 15 ஆயிரம் டிராக்டர் யூனிட் அளவுக்கான மண்ணை குளத்தில் இருந்து எடுத்து, குளம் ஆழப்படுத்தப்பட்டது. கரைகளில் இருக்கும் முட்புதர்கள் அகற்றப்பட்டு, கரையை பலப்படுத்தும் பணிகளும் நடந்தன.
இந்நிலையில் இரு தினங்களுக்கு முன் வனப்பகுதியில் பெய்த கனமழையால், ஏற்பட்ட காட்டாற்று வெள்ளம் குளத்திற்கு வரத் தொடங்கியுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இப்பணியை ஒருங்கிணைத்த கொடிவேரி பாசனசபைத் தலைவர் சுபி தளபதி கூறியதாவது:
சத்தியமங்கலம் வட்டத்தில் பெரியகுளம்,பெரும்பள்ளம், கம்பத்ராயன் குளம், கோபி வட்டத்தில் குண்டேரிப்பள்ளம், வேதபாறை, சஞ்சீவிராயன் குளம், அந்தியூர் வட்டத்தில் தண்ணீர் பந்தல் ஏரி, வரட்டுப்பள்ளம், ஜர்தல் ஏரி ஆகியவை 150 முதல் 500 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரிய குளங்கள்.
இத்தகைய பெரிய குளங்கள் மற்றும் 50 ஏக்கர் வரை பரப்பளவு கொண்ட50-க்கும் மேற்பட்ட சிறிய குளங்கள் அனைத்தும் வனப்பகுதியில் பெய்யும் நீரை சேகரிக்கும் கட்டமைப்பு கொண்டவையாகும்.
அரசு கவனிக்குமா?
இந்த நீர்நிலைகளைப் பொறுத்தவரை நிர்வாகம் பொதுப்பணித்துறை வசமும், நீர் தேங்கும் பகுதி வனத்துறை வசமும் உள்ளது. இரு துறைகளிடையே இணக்கம் இல்லாததால், பல குளங்கள் தூர்வார முடியாத நிலை நீடிக்கிறது. தற்போது விவசாயிகளால் தூர்வாரப்பட்ட சஞ்சீவிராயன் குளத்தில் கூட, வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நிலப்பரப்பில் தூர்வார அனுமதி கிடைக்கவில்லை.
எனவே, வனப்பகுதிகளில் பெய்யும் மழைநீர் காட்டாற்று வெள்ளமாய் வந்து குளங்களை நிரப்பும் வகையில், அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்தந்த பகுதி விவசாயிகள் உதவி மற்றும் பங்கேற்புடன் அனைத்து குளங்களையும் தூர்வார தேவையான நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும், என்றார்.