வகுப்புவாத அரசியலைத் தமிழக அரசு உறுதியோடு தடுக்க வேண்டும்: மார்க்சிஸ்ட் கோரிக்கை

வகுப்புவாத அரசியலைத் தமிழக அரசு உறுதியோடு தடுக்க வேண்டும்: மார்க்சிஸ்ட் கோரிக்கை
Updated on
1 min read

வகுப்புவாத அரசியலை எந்தவொரு வடிவத்திலும் தமிழகத்தில் அனுமதிக்க முடியாது எனும் நிலைப்பாட்டில் தமிழக அரசு உறுதியாக இருக்க வேண்டும், என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இன்று வெளியிட்ட அறிக்கை:

“மத அடையாளங்களை அரசியலுக்குப் பயன்படுத்தி கலவரங்களை வளர்ப்பதும், அதன் மூலம் கட்சியின் நடவடிக்கைகளைத் திட்டமிடுவதும்தான் பாஜகவின் வாடிக்கையாக உள்ளது. பல்வேறு மாநிலங்களில் இத்தகைய முயற்சிகளை அக்கட்சி எடுத்து வருவதைக் கண்கூடாகப் பார்க்கவும் முடிகிறது.

இந்நிலையில் அதே நோக்கத்தோடுதான் அத்தகையதொரு அரசியலை மேற்கொள்ளவும், அதற்கான வாய்ப்பாகவும் தமிழகம் தழுவிய அளவில் வேல் யாத்திரையை மேற்கொள்ள பாஜக திட்டமிட்டிருந்தது. அத்தகையதொரு அறிவிப்பு வந்தவுடனேயே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது கடுமையான ஆட்சேபனையைத் தெரிவித்ததோடு, கலவரத்திற்கு வித்திடும் அந்த வேல் யாத்திரைக்கு அனுமதி அளிக்கக்கூடாது எனத் தமிழக அரசுக்கும் வேண்டுகோள் விடுத்திருந்தது.

தற்போது பாஜக நடத்தத் திட்டமிட்டிருந்த வேல் யாத்திரைக்கு அனுமதி அளிக்க மறுத்த தமிழக அரசின் நடவடிக்கைக்கு மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் வரவேற்பு தெரிவிப்பதோடு, அனுமதி கேட்டு பாஜக நீதிமன்றத்திற்குச் சென்று மேல் முறையீடு செய்தாலும், அங்கும் உறுதியாக வாதாடி அனுமதி மறுக்கப்பட்டதை உறுதி செய்ய வேண்டும்.

வகுப்புவாத அரசியலை எந்தவொரு வடிவத்திலும் தமிழகத்தில் அனுமதிக்க முடியாது எனும் நிலைப்பாட்டில் அரசு உறுதியாக இருக்க வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழுவின் சார்பில் தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறோம்”.

இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in