Last Updated : 05 Nov, 2020 06:42 PM

 

Published : 05 Nov 2020 06:42 PM
Last Updated : 05 Nov 2020 06:42 PM

தமிழகத்தில் புதிதாக 54 புராதான இடங்கள் கண்டுபிடிப்பு: உயர் நீதிமன்றத்தில் தொல்லியல் துறை தகவல்

தமிழகத்தில் ஏற்கெனவே 92 பாதுகாக்கப்பட்ட புராதான இடங்கள் உள்ள நிலையில், மேலும் 54 பாதுகாக்கப்பட்ட புராதான இடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என உயர் நீதிமன்றத்தில் தொல்லியல்துறை தெரிவித்துள்ளது.

கீழடி, கொந்தகை, சிவகளை, ஆதிச்சநல்லூர், கொடுமணல், தாமிரபரணி ஆற்றுப்படுகை கிராமங்களில் அகழாய்வு நடத்தக்கோரி எழுத்தாளர் காமராஜ், மதுரை சமணர் படுகை உள்ளிட்ட பழங்கால அடையாளங்களைப் பாதுகாக்கக் கோரி நாகமலை புதுக்கோட்டை ஆனந்தராஜ் ஆகியோர் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்கள் நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. தொல்லியல் துறை தரப்பில், ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை கார்பன்டேட்டிங் சோதனைக்கு உட்படுத்தியபோது, அந்த பொருட்கள் கிமு 696 முதல் கிமு 540 வரை மற்றும் கிமு 806 முதல் கிமு 906 ஆண்டுக்கு உட்பட்டது எனத் தெரிகிறது. ஆதிச்சநல்லூர், புலிகட்டு, மலையடிப்பட்டி, கீழடி அகழாய்வு அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகின்றன. விரைவில் அறிக்கை வெளியிடப்படும்.

கொடுமணல் அகழாய்வில் எடுக்கப்பட்ட 10 பொருட்கள் கார்பன் டேட்டிங் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. கரோனா தொற்று காரணமாக முடிவு வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. கொடுமணல் அகழாய்வில் 96 பொருட்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. அவற்றில் 356 தமிழ் பிராமி எழுத்துக்கள் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுவரை நடைபெற்ற அகழாய்வுகளில் நெடில் எழுத்துக்கள் கிடைக்கப் பெறாத நிலையில், முதன்முறையாக கொடுமணல் அகழாய்வில் அ,ஆ,இ,ஈ என்ற நெடில் எழுத்துக்கள் கிடைத்துள்ளன.

இதுவரை 11 ஆயிரம் கல்வெட்டுகள் படிவம் எடுக்கப்பட்டுள்ளன. தமிழ் கல்வெட்டுகளில் பல 15 அடி உயரத்துக்கு மேல் இருப்பதால் அவற்றை படிமம் செய்வதில் சிரமம் உள்ளது. அதற்கான தொழில்நுட்பங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் பாதுகாக்கப்பட்ட புராதான பகுதிகளாக 92 இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தற்போது புதிதாக 54 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள், கொடுமணல் அகழாய்வில் கிடைத்த 12 பொருட்களையும், அதன் வயதை அறியும் கார்பன் டேட்டிங் சோதனைக்காக அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்திற்கு 10 நாளில் அனுப்ப வேண்டும். இதற்கான செலவை தமிழக அரசு ஏற்க வேண்டும்.

மதுரை யானைமலை சமண சமய அடையாளமாக பார்க்கப்படுகிறது. அங்கு புதிதாக, சிமெண்டாலான வழிபாட்டு அடையாளங்கள் அமைக்கப்பட்டிருப்பதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதை அகற்றவும், பழங்கால சின்னங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டனர்.

பின்னர், விசாரணையை டிசம்பர் 7-க்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x