

அய்யம்பாளையம் அருகேயுள்ள மருதாநதி அணை முழு கொள்ளவை எட்டியதால் பாசன விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் தண்ணீர் முழுவதுமாக ஆற்றில் வெளியேற்றப்பட்டுவருகிறது.
திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையம் அருகே கொடைக்கானல் கீழமலை அடிவாரத்தில் உள்ளது மருதாநதி அணை.
தென்மேற்கு பருவமழையால் கணிசமான அளவு நீர் மட்டம் உயர்ந்தநிலையில் நேற்று இரவு பெய்த கொடைக்கானல் கீழ்மலைப்பகுதியில் பெய்துவரும் மழையால் அணையின் வேகமாக உயரத்தொடங்கியது.
ஒரே இரவில் 4 அடி நீர் மட்டம் உயர்ந்ததால் அணை நிரம்பியது(மொத்தம் 74 அடி). அணையின் பாதுகாப்பு கருதி 150 கன அடி தண்ணீர் இன்று திறந்துவிடப்பட்டது.
அணைக்கு நீர்வரத்தைப் பொறுத்து திறந்துவிடப்படும் நீரின் அளவும் அதிகரிக்கப்படும், என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
அணையில் இருந்து உபரிநீர் வெளியேறுவதால் மருதாநதி கரையோரம் வசிப்பவர்கள் பாதுகாப்பாக இருக்கும்படி எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
வடகிழக்கு பருவமழை முழுமையாக தொடங்காத நிலையில் அணை நிரம்பியதால் மருதாநதி அணை பாசன விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.