Published : 05 Nov 2020 04:31 PM
Last Updated : 05 Nov 2020 04:31 PM

எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் அதிநவீன சிடி ஸ்கேன் கருவி: அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்

எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் ரூ.4 கோடி மதிப்பிலான உடல் முழுவதையும் 10 விநாடிகளில் படமெடுக்கும் அதிநவீன 128 கூறு சி.டி. ஸ்கேன் கருவியை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

“சென்னை, எழும்பூர், அரசு குழந்தைகள் நல மருத்துவமனை தெற்கு ஆசியாவின் மிகப் பெரிய குழந்தைகள் மருத்துவமனையாகச் செயல்பட்டு வருகிறது. தற்பொழுது இம்மருத்துவமனையில் 4 கோடி ரூபாய் மதிப்பில் அதிநவீன 128 கூறு சி.டி. ஸ்கேன் கருவி தொடங்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற 128 கூறு சி.டி. ஸ்கேன் கருவி ஏற்கெனவே 8 இடங்களில் நிறுவப்பட்டுப் பயன்பாட்டில் உள்ளது. 128 கூறு சி.டி. ஸ்கேன் கருவி மூலம் உடல் முழுவதும் 10 வினாடிகளிலும், இருதயம் மற்றும் இருதய ரத்த நாளங்களை 2 வினாடிகளிலும் மிகத் துல்லியமாகப் படம் எடுக்க முடியும்.

தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் 115 சி.டி.ஸ்கேன் கருவிகள் நிறுவப்பட்டுப் பயன்பாட்டில் உள்ளன. அவற்றில் கடந்த ஆண்டில் மட்டும் 55 சி.டி.ஸ்கேன் கருவிகள் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டுள்ளன.

இந்நிலையில், எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் ரூ.4 கோடி மதிப்பிலான உடல் முழுவதையும் 10 விநாடிகளில் படமெடுக்கும் அதிநவீன 128 கூறு சி.டி. ஸ்கேன் கருவியை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று தொடங்கி வைத்தார்.

''தமிழ்நாட்டில் இதுவரை 64,193 குழந்தைகள் கரோனா நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டுச் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இதில் 1,100 குழந்தைகளுக்கு எழும்பூர், அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவிலேயே குழந்தைகள் நல மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சையில் அதிகபட்சமாகும். மேலும், தாயிடமிருந்து குழந்தைக்கு நோய்த்தொற்று பாதிப்பு அளவு 2 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது.

தற்பொழுது பண்டிகைக் காலங்களில் பொது இடங்களில் மக்கள் கூட்டம் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளதால் முகக் கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியைப் பின்பற்றுதல் போன்ற நடவடிக்கைகளை மிகக் கடுமையாகப் பின்பற்ற வேண்டும். குழந்தைகள் மற்றும் மூத்த குடிமக்கள் வெளியே செல்வதைத் தவிர்த்திட வேண்டும். ஆரோக்கியமான இளைஞர்கள் பொருட்களை வாங்கச் சென்று வாங்கலாம். அவர்களும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும்'' என்று அமைச்சர் விஜயபாஸ்கர் வேண்டுகோள் விடுத்தார்.

இந்நிகழ்ச்சியில் சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன், மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு, ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை முதல்வர் தேரணி ராஜன், குழந்தைகள் நல மருத்துவமனை இயக்குநர் எழிலரசி மற்றும் உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்”.

இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x