பேரறிவாளனின் பரோலை நீட்டிக்கக் கோரி அற்புதம்மாள் மனு: உயர் நீதிமன்றத்தில் நாளை விசாரணை

பேரறிவாளனின் பரோலை நீட்டிக்கக் கோரி அற்புதம்மாள் மனு: உயர் நீதிமன்றத்தில் நாளை விசாரணை
Updated on
1 min read

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதியாக சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோல் வழங்கப்பட்ட நிலையில், அது முடிவடைய உள்ளதால் மேலும் 30 நாட்களுக்குப் பரோலை நீட்டித்துத் தரக் கோரி அவரது தாயார் அற்புதம்மாள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதியாக சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன், உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதால், அவருக்கு 90 நாட்கள் விடுப்பு (பரோல்) வழங்கக் கோரி அவரது தாயார் அற்புதம்மாள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கின் விசாரணை நீதிபதிகள் என்.கிருபாகரன், வி.எம்.வேலுமணி அமர்வில் நடைபெற்று வந்தது. அப்போது, விடுப்பு (பரோல்) மனுவை ஏற்கெனவே நிராகரித்துவிட்டதாக தமிழக அரசும், சிறைத்துறையும் தெரிவித்தன.

அற்புதம்மாள் தரப்பில், “விடுதலை செய்ய முடிவெடுத்த அரசு, பரோல் வழங்க எதிர்ப்புத் தெரிவிப்பதாகவும், விடுதலை செய்ய முடிவெடுத்ததும், விடுப்பு மறுப்பதும் ஒரே கட்சியின் தலைமையிலான அரசுதான்” என வாதிடப்பட்டது.

இதையடுத்து, அமைச்சரவை மாறியிருந்தாலும், முடிவெடுத்த அரசுகள் ஒன்றுதான் என்பதைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், பேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோல் வழங்கி உத்தரவிட்டிருந்தனர். இதையடுத்து அவருக்குப் பரோல் வழங்கப்பட்டது.

இந்நிலையில், பேரறிவாளனின் விடுப்பு (பரோல்) காலம் வரும் நவ.9 ஆம் தேதியோடு முடிவடைவதால், மேலும் 30 நாட்கள் பரோல் நீட்டிப்புக் கேட்டு அற்புதம்மாள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அதில், பேரறிவாளனுக்கு வழங்கப்பட்டு வரும் சிகிச்சை தொடர வேண்டியுள்ளதால், கூடுதல் நாட்கள் விடுப்பு (பரோல்) வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த மனு நாளை விசாரணைக்கு வரவுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in