Published : 05 Nov 2020 03:38 PM
Last Updated : 05 Nov 2020 03:38 PM

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் நகைகளில் முறைகேடு இல்லை; எல்லாம் சரியாக உள்ளது: இணை ஆணையர் கல்யாணி விளக்கம்

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் தங்கம், வெள்ளி நகைகள் அனைத்தும் சரியாக உள்ளது. நகைகளின் பாதுகாப்பு குறித்து பொது மக்களும், பக்தர்களும் கவலை கொள்ளத் தேவையில்லை எனக் கோயிலின் இணை ஆணையர் கல்யாணி தெரிவித்துள்ளார்.

ராமேசுவரம் அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோயிலின் இணை ஆணையர் கல்யாணி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பின் விவரம் வருமாறு,

''ராமேசுவரம் அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோயில் நகைகளில் எடை குறைவு ஏற்பட்டதாக திருக்கோயில் பணியாளர்களிடம் விளக்கம் கோரப்பட்டது குறித்து பல்வேறு ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து சமூக ஊடகங்களில் இது குறித்து பல்வேறு கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன.

ராமநாதசுவாமி திருக்கோயிலில் கடந்த 1978-ல் நகைகள் மற்றும் விலையுயர்ந்தவைகள் மறுமதிப்பீடு செய்யப்பட்டன. பின்னர் சிவகங்கை துணை ஆணையர் / நகை சரிபார்ப்பு அலுவலரால் 29.01.2019 முதல் 07.03.2019 முடிய இத்திருக்கோயிலின் நகைகள் மற்றும் விலையுயர்ந்த பொருட்கள் மறுமதிப்பீடு செய்யப்பட்டு பார்வைக்குறிப்பு 2-ன்படி மறு மதிப்பீட்டு அறிக்கை பெறப்பட்டது.

40 ஆண்டுகள் கழித்து நடைபெற்ற மதிப்பீட்டில் பயன்பாட்டில் இருந்த மொத்த 215 இனங்களில் தேய்மானம் காரணமாக எடை குறைவு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்து 18 பொன் இனங்களில் சுமார் 68 கிராம் எடை குறைவுக்கான தொகை ரூ. 2,11,790 எனவும், 14 பொன் இனங்களில் சிறு சிறு பழுது ஏற்பட்டுள்ளதற்கான மதிப்பு ரூ. 2,454 எனவும் தெரிவித்து ஆக கூடுதல் 2,14, 244 எனவும், வெள்ளி இனங்களில் பயன்பாட்டில் இருந்த 344 இனங்களில் 42 இனங்களில் 25,811 கிராம் தேய்மானத்தின் அடிப்படையிலான எடை குறைவுக்கான தொகை ரூ. 10, 93,340 எனவும் மதிப்பீடு செய்யப்பட்டு, வெள்ளி இனங்களில் தங்கம் முலாம் பூசப்பட்ட இனங்களில் 43 கிராம் 700 மில்லிகிராம் எடை குறைவிற்கான மதிப்பு ரூ. 1,35,670 ஆக கூடதல் வெள்ளி இனங்களில் மொத்தம் 12, 29,010 இழப்பு எனவும் மதிப்பீடு செய்யப்பட்ட அந்த பொருட்களை பொறுப்பில் வைத்திருந்த பணியாளர்களிடமிருந்து வசூல் செய்யலாம் எனவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்கம், வெள்ளி இனங்களில் அனைத்தும் இனங்களும் எண்ணிக்கையில் சரியாக உள்ளது.

கடந்த மறுமதிப்பீட்டிற்கும் தற்போதைய மறுமதிப்பீட்டிற்கும் இடையே 40 ஆண்டுகள் இடைவெளி உள்ள நிலையில் இந்த 40 ஆண்டு காலத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற பணியாளர்கள் 13 பேர், விருப்ப ஓய்வு பெற்ற 2 நபர்கள், தற்போது பணியில் உள்ள 32 பேர் ஆக மொத்தம் 47 என பணியாற்றி உள்ளவர்களுக்கு 40 ஆண்டுகால பயன்பாடு காரணமாக தேய்மானம் ஏற்பட்டு அதற்கான எடை குறைவுக்கான இழப்பினை ஏன் தங்களிடமிருந்து வசூல் செய்யக்கூடாது என விளக்கம் கோரி தொடர்புடைய பணியாளர்களுக்கு அறிவிப்பு அனுப்பப்பட்டது.

இது ஒரு வழககமான அலுவலக நடைமுறை. முறைகேடுகள் ஏதும் நடைபெற்றதாக மேற்படி மதிப்பீட்டு அறிக்கையிலோ திருக்கோயில் பணியாளர்களுக்கு அனுப்பப்பட்ட அறிவிப்பிலோ தெரிவிக்கப்படவில்லை. இதற்காக பொது மக்களோ, பக்தர்களோ திருக்கோயில் நகைகளின் பாதுகாப்பு குறித்து எவ்விதமான அச்சமோ கவலையோ கொள்ளத் தேவையில்லை எனத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது'' என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x