

தினமும் அறிக்கை விட்டு அறிக்கையில் அரசியல் செய்யும் ஸ்டாலின், ஆன்லைன் ரம்மியைத் தடை செய்ய வேண்டும் என்று அக்கறையாகக் கேட்கிறார். இதனைக் கேட்க அவருக்குத் தார்மீக உரிமை இல்லை என, சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் விமர்சித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே பொம்மையார்பாளையத்தில் இன்று (நவ. 5) நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் சி.வி.சண்முகம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"ஆன்லைன் லாட்டரியைத் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது. இதுகுறித்து அரசு பரிசீலித்து வருகிறது. ஏற்கெனவே ஜெயலலிதாதான் லாட்டரியைத் தடை செய்தார்.
ஆனால், தினமும் அறிக்கை விட்டு அறிக்கையில் அரசியல் செய்யும் ஸ்டாலின், ஆன்லைன் ரம்மியைத் தடை செய்ய வேண்டும் என்று அக்கறையாகக் கேட்கிறார். இதனைக் கேட்க அவருக்குத் தார்மீக உரிமை இல்லை.
லாட்டரியைத் தடை செய்த பின்பு 2006-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த திமுக, கோவையில் செம்மொழி மாநாடு நடத்தியபோது லாட்டரி அதிபரோடு உறவாடியது.
ஆன்லைன் லாட்டரி தொடர்பான வழக்கு, கடந்த திங்கட்கிழமை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது அரசின் பரிசீலனையில் உள்ளது என்று வழக்கறிஞர் மூலம் தெரிவிக்கப்பட்டது.
மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு அரசாணை வெளியிட்ட பின்பு, தான் போராடியதால் கிடைத்தது என்று பெருமை பேசியதுபோல இந்த விவகாரத்திலும் ஸ்டாலின் அரசியல் செய்கிறார்".
இவ்வாறு அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.