

மதுரை மாவட்டம் பேரையூர் வட்டம் டி.கல்லுப்பட்டியில் ஏழு ஊர் முத்தாலம்மன் கோவில் சப்பரம் திருவிழா இன்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.
அம்மாபட்டியில் ஏழு ஊர்க்கு அம்மன் உருவாக்கப்பட்டு அவ்வூர் மண்பானை செய்யும் கலைஞர் அம்மன் தயார் செய்து முதல் நாள் இரவு சுமார் 6.30 மணியளவில் கண் திறக்கும் நிகழ்ச்சி நடைபெறும்.
பின்னர், டி. கல்லுப்பட்டி, தேவன்குறிச்சி, வன்னிவேலம்பட்டி, காடனேரி,கிளாங்குளம்,சத்திரப்பட்டி ஆகிய ஊர்களில் இருந்து ஆறு சப்பரங்கள் செய்து வந்து அம்மாபட்டியிலிருந்து முத்தாளம்மனை அவரவர் ஊருக்கு அழைத்துச் சென்று வழிபடுவது இந்தத் திருவிழாவின் சிறப்பம்சம்.
இந்த விழாவில் கலந்து கொள்ள வெளியூர்களில் இருந்தாலும் சொந்த ஊருக்கு பக்தர்கள் தவறாமல் திரும்பிவிடுவர். கரோனா இக்கட்டிலும் பொதுமக்கள் திரண்டனர்.
தேவன்குறிச்சி T.கல்லுப்பட்டி வன்னிவேலன்பட்டி சத்திரபட்டி, கிளாங்குளம், காடனேரி போன்ற 6 ஊர் கிராமங்களில் காப்பு கட்டி 15 நாள் விரதம் இருந்த இளைஞர்கள் சுமார் 50 அடி உயரத்தில் அம்மன் சப்பரம் செய்து, அதைத் தூக்கிக் கொண்டு பக்தர்கள் புடைசூழ அம்மாபட்டி கிராமத்திற்கு வந்தனர்.
பின்னர் சப்பரங்களில் 6 சாமி சிலைகளை எடுத்துக் கொண்டு T.கல்லுப்பட்டிற்கு வந்து அங்கு கிராம நாட்டமை வீட்டிற்கு சென்று அவர்க்கு முதல் மரியாதை அம்மனுக்கு வழங்குவர்.
அதன் பின் அவரவர் ஊர்களுக்குச் சென்று அம்மனை வைத்து மாவிளக்கு தேங்காய் பழம் வைத்து வழிபடுவார்கள். பின் இரவு பூஞ்சோலைக்கு அனுப்பும் வைபவம் நடக்கும்.
இதற்கு காவல்துறை துணை கண்காணிப்பாளர் மதியழகன் தலைமையில் காவல் ஆய்வாளர் துரைப்பாண்டி முன்னிலையில் நூற்றுகணக்கான காவலர்கள் பாதுகாப்பு வழங்கினர்.
சமூக இடைவெளியை மறந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்.