

தமிழகத்தில் ஆயுத பூஜை, தசரா, தீபாவளி பண்டிகைகள் நெருங்கும் நேரத்தில் கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 2 மாதங்களில் பருப்பு விலைகள் இரு மடங்கு உயர்ந்துள்ளதால், பொதுமக்கள், வியாபாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
ஆயுத பூஜை வரும் 21-ம் தேதி கொண்டாடப்படுகிறது. தொடர்ந்து தசரா, தீபாவளி பண் டிகை, முகூர்த்த நாட்கள் அடுத்த டுத்து வருகின்றன. இந்நேரத்தில் அன்றாட சமையல், விழாக்கால விருந்து, ஹோட்டல் உணவுகளில் முக்கியப் பங்கு வசிக்கும் பருப்பு, எண்ணெய், மளிகைப்பொருட் களின் விலைகள் தொடர்ந்து 2 மாதங்களாக கடுமையாக உயர்ந்து வருகின்றன.
குறிப்பாக கடந்த இரு மாதங் களுக்கு முன் கிலோ ரூ.110-க்கு விற்ற துவரம் பருப்பு தற்போது ரூ.210 ஆக உயர்ந்துள்ளது. ரூ.90-க்கு விற்ற உளுந்தம் பருப்பு தற்போது ரூ.190-க்கும், பயத்தம் பருப்பு ரூ.80-க்கு விற்றது தற் போது ரூ.130-க்கும், 50 ரூபாய்க்கு விற்ற கடலைப் பருப்பு தற்போது 70 ரூபாய்க்கும் உயர்ந்துள்ளன. அதனால், நடுத்தர, ஏழை மக்கள் அன்றாட சமையலில் துவரை, உளுந்து, கடலைப் பருப்புகளை சேர்க்க முடியாமல் தவிக்கின்றனர்.
இந்த விலை உயர்வை ஹோட்டல்களில் சத்தமில்லாமல் சாப்பாடு விலையை உயர்த்தி சரிக்கட்டியுள்ளனர். உளுந்து உள் ளிட்ட பருப்பு வகைகள் மட்டுமின்றி தற்போது எண்ணெய் வகைகள், சர்க்கரை உள்ளிட்ட மற்ற அத்தியா வசியப் பொருட்களின் விலையும் தொடர்ந்து உயருவதால் பொது மக்கள் கடும் அதிருப்தியடைந்துள் ளனர்.
இதுகுறித்து சென்னை கொத்த வால் சாவடியைச் சேர்ந்த பருப்பு மொத்த வியாபாரி சரவணன் ‘தி இந்து’விடம் நேற்று கூறியதாவது:
மொத்த வியாபாரத்தில் இரு மாதங்களுக்கு முன் ஒரு குவிண்டால் துவரம் பருப்பு (முழு பருப்பு) விலை ரூ.6 ஆயிரமாக இருந்தது. தற்போது ரூ. 13 ஆயிரமாக உயர்ந்துள்ளது. உளுந்து ஒரு குவிண்டால் ரூ.7 ஆயிரமாக இருந்தது, தற்போது 13 ஆயிரமாக உயர்ந்தது. ரூ.4.500 ஆக இருந்த கடலைப் பருப்பு தற்போது ரூ.6 ஆயிரமாக உயர்ந்துள்ளது.
பர்மாவில் விளைச்சல் குறைவு
இந்தியாவைப் பொருத்தவரை யில் பருப்பு வியாபாரம் 70 சதவீதம் பர்மா, ஆஸ்திரேலியா, கனடா ஆகிய நாடுகளை நம்பியே உள்ளது. குறிப்பாக பர்மாவில் இருந்து அதிகபட்சமாக 50 சதவீதம் பருப்பு இறக்குமதி செய்யப்படு கிறது. கடந்த ஆண்டு பர்மாவில் நல்ல விளைச்சல் இருந்ததால் உபரியாக பருப்பு தமிழகத்துக்கு அதிகளவு விற்பனைக்கு வந்தது.
அதனால், கடந்த ஆயுத பூஜை, தீபாவளி நேரங்களில் பருப்பு விலை இந்த ஆண்டை ஒப்பிடும்போது அதிகளவு உயரவில்லை. இந்த ஆண்டு பர்மாவில் பருப்பு விளைச்சல் குறைந்துள்ளது. அதனால், அங்கிருந்து நமது தேவைக்கேற்ப பருப்பு வரவில்லை. அதனாலேயே, இந்த விலை உயர்வு நீடிக்கிறது. கடந்த 2 மாதங்களில் துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு விலை 100 ரூபாய் வரை கூடியுள்ளது. கடந்த 25 ஆண்டுகளை ஒப்பிடும்போது தொடர்ச்சியாக ஒரு உணவுப்பொருள் இரண்டு மாதங்களாக விலை உயர்விலேயே நீடிப்பது இதுவே முதல்முறை.
கடந்த 3 நாள் சந்தை நிலவரப்படி துவரம், உளுந்து பருப்புகள் விலை ஏற்றம், இறக்கமாக இருந்தது. தீபாவளி வரை பருப்பு விலை மேலும் கூடலாம். குறைய வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை.
வரும் நவ. 15-ம் தேதிக்கு மேல் டிசம்பர் முதல் வாரத்தில் தமிழகம் மற்றும் வடமாநிலங்களில் சாகுபடியான பருப்புகள் விற்பனைக்கு வரும். அதன்பின்பே விலை குறைய வாய்ப்புள்ளது என்றார்.