

நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடுகளில் ஈடுபடும் ஊழியர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்தும் சென்னை தலைமைச் செயலகம் முன் நவ.26-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.
தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தின் செயற்குழுக் கூட்டம் அதன் மாநிலத் தலைவர் பூரா.விசுவநாதன் தலைமையில் திருச்சியில் இன்று (நவ. 5) நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், "வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், ஏரி, அணைக்கட்டுகள் ஆகியவற்றில் மழைநீரை சேமிக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல் துறை ஆகியவற்றில் செயல்படுத்தப்படும் அரசின் திட்டங்கள் சாதாரண விவசாயிகளுக்குக் கிடைப்பதில்லை. எனவே, இதைக் கண்டித்து விரைவில் முற்றுகை போராட்டம் நடத்தப்படும்.
காவிரி- புதுகை- குண்டாறு இணைப்புத் திட்டத்தை காலதாமதம் செய்யாமல் விரைவாக தொடங்க வேண்டும். விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தை விரைவாக வழங்க வேண்டும்.
மழைக் காலங்களில் குடிமராத்து, நீர்வள - நிலவள மேம்பாட்டுத் திட்டப் பணிகள் ஆகியவற்றை மேற்கொள்ளக் கூடாது" என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்தக் கூட்டத்தில் சங்கத்தின் ஒன்றியத் தலைவர்கள் வி.ராமலிங்கம் (லால்குடி), எம்.பெரியசாமி (திருவெறும்பூர்), மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கோவிந்தன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பூரா.விசுவநாதன் கூறும்போது, "விவசாயிகளுக்கு எதிராகவும், பெரு நிறுவனங்களுக்கு சாதகமாகவும் கொண்டு வரப்பட்டுள்ள புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்தும், இந்த சட்டங்களைத் தமிழ்நாட்டில் அமல்படுத்தக் கூடாது மற்றும் புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தியும் நவ.26-ம் தேதி சென்னை தலைமைச் செயலகம் முன் 18 மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் 1,000 பேரைத் திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
தமிழ்நாட்டில் 862 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளதாக நுகர்பொருள் வாணிபக் கழக இயக்குநர் தெரிவித்துள்ளார். ஆனால், அனைத்து நெல் கொள்முதல் நிலையங்களும் திறக்கப்படுவதில்லை. திறந்திருக்கும் நெல் கொள்முதல் நிலையங்களிலும் 10 நாட்கள் முதல் 15 நாட்கள் வரை காத்திருக்க வேண்டியுள்ளது.
நெல் கொள்முதல் நிலையத்தில் 40 கிலோ மூட்டைக்கு ரூ.40 கொடுத்தால்தான் நெல்லைக் கொள்முதல் செய்கின்றனர். இதை மாவட்ட ஆட்சியர்களும், நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர்களும் அறிந்தாலும் நடவடிக்கை எடுப்பதில்லை.
இதனிடையே, நெல் கொள்முதல் செய்ய விவசாயிகளிடம் பணம் கேட்பதை உயர் நீதிமன்றம் கடுமையாக கண்டித்துள்ளது. விவசாயிகளின் வேதனையை உணர்ந்துதான் நீதிமன்றம் கடுமையான கருத்தைத் தெரிவித்துள்ளது. இதை நாங்கள் வரவேற்கிறோம். எனவே, நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடுகளில் ஈடுபடும் ஊழியர்கள் மீது தமிழ்நாடு அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதேவேளையில், நெல் கொள்முதல் நிலையத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஊதியம் மிகக் குறைவாக அளிக்கப்படுவதாக கூறப்படுவதால், சரியான ஊதியத்தை அவர்களுக்கு அளிக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக, கிடங்குடன் கூடிய நிரந்தர நெல் கொள்முதல் நிலைய கட்டிடம் கட்ட வேண்டும்" என்றார்.