Published : 05 Nov 2020 10:35 AM
Last Updated : 05 Nov 2020 10:35 AM

ராஜஸ்தான், மேற்கு வங்காளம், சிக்கிம் ஆகிய மாநிலங்கள் பட்டாசு விற்பனைக்கு உள்ள தடை உத்தரவைத் திரும்பப் பெற வேண்டும்: ஜி.கே.வாசன்

ராஜஸ்தான், மேற்கு வங்காளம், சிக்கிம் ஆகிய மாநிலங்கள் பட்டாசு விற்பனைக்கு உள்ள தடை உத்தரவைத் திரும்பப் பெற வேண்டும் என, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, ஜி.கே.வாசன் இன்று (நவ. 5) வெளியிட்ட அறிக்கை:

"தற்போது தீபாவளிப் பண்டிகை நெருங்கிக் கொண்டு இருக்கிறது. தீபாவளி என்றாலே பட்டாசும் இனிப்பும்தான் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நினைவுக்கு வரும். இந்தியாவில் பல்வேறு மாநிலங்களுக்குத் தமிழகத்தில் உள்ள விருதுநகர் மாவட்டத்தில் இருந்துதான் பட்டாசு அனுப்பப்படுகிறது. இந்தத் தொழிலில் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் 6 லட்சத்திற்கும் மேல் ஈடுபடுகின்றனர். பல்வேறு நேரங்களில் உயிருக்கே ஆபத்தான நிலையில்தான் இவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தைக் காப்பாற்றும் விதமாக இந்தத் தொழிலில் ஈடுபடுகின்றனர்.

ராஜஸ்தான், மேற்கு வங்காளம், வட கிழக்கு மாநிலமான சிக்கிம் ஆகிய மாநிலங்களில் பட்டாசு விற்பனை செய்யவும், பட்டாசு வெடிக்கவும் அம்மாநில அரசுகள் தடை விதித்துள்ளன. இது 6 லட்சம் மக்களின் வாழ்வாதாரத்தையே அழிக்கும் அறிவிப்பாகும். பட்டாசு வெடிப்பதால் காற்று மாசுபடும் என்றோ, காற்றில் கரோனா பரவும் என்றோ உறுதிப்படுத்தவில்லை என்று உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.

அதோடு தென் மாநிலங்களான தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா உள்பட 18 மாநிலங்களில் வரும் நவம்பர் 7-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை பட்டாசு வெடிக்கத் தடை செய்யலாமா என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அந்தந்த மாநிலச் செயலாளர்களுக்கும் மாசு கட்டுப்பாடு வாரியத்திற்கும், காவல்துறைக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஆதலால், காலம்தொட்டு பட்டாசு வெடித்துக் கொண்டாடும் சிறுவர்களின் உற்சாகமும் மகிழ்ச்சியும் தொலைந்துபோகும் சூழல் தற்போது ஏற்பட்டு இருக்கிறது. அதோடு, இந்த அறிவிப்பால் பெரும் பட்டாசு உற்பத்தியாளர்கள், சிறு, குறு உற்பத்தியாளர்கள், குடிசைத் தொழில் செய்பவர்கள் எனப் பெரும்பாலோனோர் பொருளாதார இழப்பையும் மற்றும் தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தையும் இழக்கின்றனர்.

ஆகவே, லட்சக்கணக்கான ஏழை, எளிய, நடுத்தர மக்களின் நலனில் அக்கறை கொண்டு பட்டாசு வெடிப்பதற்கான தடை உத்தரவைத் திரும்பப் பெற வேண்டும் என்று தமாகா சார்பாகக் கேட்டுக்கொள்கிறேன்".

இவ்வாறு ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x